பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

99


துன்பங்களைச் சந்திப்பது இயல்பு. ஆனால், துன்பங்கள் இயற்கை என்றும், துன்பங்கள் மாற்ற இயலாதவை என்றும் எண்ணக்கூடாது; முடிவுக்கும் வரக்கூடாது. நேற்றைய அவலம் இன்றைய அறிவறிந்த ஆள்வினைக்குத் தூண்டு கோள்! இன்றைய அறிவறிந்த ஆள்வினை நாளைய ஆக்கம்! வாழ்க்கையை இன்று, நாளை என்று பிரித்துப் பகுத்தது பக்குவப்படுத்துதலுக்கேயாம். "இன்று மட்டுமே வாழ்க்கை! நாளை யாரறிவார்?" என்று நிலையாமைத் தத்துவத்தின் பிடியில் சிக்கிப் புலம்புதல் அறியாமை. நாளையும் நமது வாழ்க்கை இருக்கிறது. நாளை மட்டும் அல்ல, நாளை மறுநாளும் இருக்கிறது. நாளை மறுநாள் மட்டும் அல்ல, என்றென்றும் ஆன்மா வாழ்கிறது என்பதே உயர் சமய நெறிக்கொள்கை. அது மட்டுமல்ல, நாளைய வரலாற்றில் நினைவு கூறப்படுதலும் வாழ்தல்தானே! வரலாற்றில் நினைவு கூறப்படும் வாழ்க்கையைத்தானே "உளதாகும் சாக்காடு” என்று திருவள்ளுவர் கூறினார்.

ஆம்! இன்று பலர் வாழ்கின்றனர்! இல்லை! வாழ்வது போலக் காட்டுகின்றனர்! ஆனால் உண்மையில் வாழவில்லை. "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!” என்ற திருவாசம் அறிக, வாழும் பொழுதே செத்துப் போனவர்களே பயன்பாடு இல்லாத வாழ்க்கையைச் சுமந்துகொண்டு திரிபவர்களே, வையத்திற்குச் சுமையாக இருப்பவர்களே எண்ணற்றோர். இவர்கள் வாழ்வில் செத்தவர்கள்; ஒரு சிலர் சாவில் வாழ்பவர்கள்! மரண வாயிலின் விளிம்பிலும் அறிவு மூச்சுவிட்ட கிரேக்க நாட்டறிஞன் சிந்தனையாளர் சாக்ரடீஸ் நினைவுக்குரியவர். மானுடத்தின் அறிவியல் சார்ந்த அணுகுமுறை நிலவும் வரை சாக்ரடீஸ் வாழ்வார். மரணத்தை வென்று புறங்கண்ட அப்பரடிகள் உழைப்பும் தொண்டும் மானுடத்தின் உயர்நிலையாக நிலவும் வரையில் வாழ்வார். மற்றும் அறியாமையால் இழைத்த இன்னல்களைத் தாங்கிக் கொண்டு அன்பையும் கருணையையும்