பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

105


வந்துள்ளன. மேலும் விண்ணியல், பொறியியல், கணிதவியல், கணிப் பொறியியல் என்றெல்லாமும் வளர்ந்துள்ளன; வளர்ந்து வருகின்றன. மேலும் உடலியல், உளவியல், சமூகவியல், ஒழுக்கவியல், அறம் சார்ந்த நீதியியல், பழகும் பாங்கியல் என்ற எண்ணற்ற துறைகள் மானுட வாழ்வியலைச் சுற்றி வளர்ந்துவருகின்றன. இவ்வாறு துறைதோறும் வளர்ந்துவரும் அறிவியலில் மக்கள் தேர்ச்சி பெற்றால்தான் அவர்களுடைய வாழ்வு சிறக்கும்.

இவற்றுள்ளும் சமூகவியல் அறிவு, நமது மக்களுக்கு மிகுதியும் தேவை. ஏன்? நமது மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சாதிப் பிரிவினைகளாலும் மதப் பிரிவினைகளாலும் பிரிந்து கலகம் செய்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய மானுட உலகம் புதிய அறிவியல் உலகத்தில் வளர்கிறது; வாழ்கிறது. அறிவியல் உலகம் நாடுகளைக் கடந்து, கடல்களைக் கடந்து, மலைகளைக் கடந்து புவியுருண்டையை இணைத்து இன்று வெற்றி பெற்றுள்ளது. இன்று எந்தச் சிக்கலானாலும் புவியைச் சார்ந்த சிக்கல்தான். ஆனால் நாட்டு மக்களோ பழைய பானைக்குள் தலையை விட்டுக் கொண்டு தத்துவங்கள் பேசுகின்றனர். இன்று இந்தியா புறவுலக வளர்ச்சியில் 20ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறது! ஆனால் இந்தியனின், தமிழனின் மூளையும் உள்ளமும் காட்டுமிராண்டித்தனமான வாழ்ந்த யுகத்திலேயே இருக்கிறது. இந்தியன் மாறவில்லை. தமிழன் மாறவில்லை. ஆதலால் இந்தியர்கள், தமிழர்கள் புத்தம் புதிய உள்ளம் பெற்று சமூக மாந்தர்களாக விளங்க வேண்டும். எந்த நாட்டில் சமூக மனசாட்சி, சமூக உணர்வு, சமூக ஒழுங்கியல், சமூக ஒழுக்கவியல், சிறந்த முறையில் வளர்ந்து, சிறந்த சமுதாயம் வடிவம் பெறுகிறதோ அந்த நாடுதான் வளர முடியும்; வாழ முடியும். இதற்கு இன்று ஜப்பானை உதாரணமாகப் பின்பற்றலாம். ஆயினும் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆப்பிரிக்க நாடுகள், மத்திய