பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிழக்கு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் எல்லாம் சமூகவியல் சிறப்பாக இருக்கிறது. அந்த நாடுகளின் மக்கள் நாட்டுக்காக உழைக்கிறார்கள்; நாட்டுக்காக வாழ்கிறார்கள். நமது நாட்டிலோ நாட்டையே திருடி வீட்டுக்குக் கொண்டுபோவதே மிகுதி. இந்த நாட்டில் எப்படி சமூகம் உருவாகும்? “ஒருவன் எல்லோருக்காகவும் எல்லோரும் ஒருவருக்காகவும்” என்ற சமூகவியல் அறிவு, உணர்வு, ஒழுக்கம் நமது மக்களைச் சென்றடைய வேண்டும். அன்று தான் நமது நாடு வளரும்; வாழும்.

சமூக அமைப்புக்கும் இயக்கத்துக்கும் உந்து சக்தி அன்பு. அன்பு ஒரு ஆற்றல் நிறைந்த மொழி. அன்புணர்வும் அன்புணர்வு சார்ந்த ஒழுக்கமும் வாழ்வியலும் ஆயிரம் மேடைகளிலும் உயர்ந்தவை, அன்பின் மொழி மெளனப் புரட்சி செய்யும்; எண்ணற்றோரை இணைக்கும்; ஒரு நெறிப்படுத்தும். இத்தகு அன்பினை காட்டுதல் - பெறுதல், அன்பின் பயணத்தின் தடைகளை அறிதல், தடைகளை விலக்கி அன்பால் திணைந்த மாந்தருலகத்தைக் காணுதல் ஆகிய வாழ்க்கைப்பற்றிய அறிவியல் இன்றைய தேவை; உடனடியாகத் தேவை. புவிக்கோளம் அழியாமல் பாதுகாக்க, அன்பினால் உருப்பெறும் மானுடத்தினாலேயே இயலும்; முடியும்.

இந்த நூற்றாண்டில் ஒரு அறிவியல் பற்றிப் பேசாது விட்டால் கற்றுத் துறைபோய அறிஞருலகம் மன்னிக்காது. அது எந்த அறிவியல்? அதுதான் அரசியல். அரசியல் என்பது ஓர் அறிவியலேயாம். இதனை Political science என்பர். ஆனால் நமது மக்களில் பலருக்கு இல்லை. இல்லை! இன்று நாம் காண்பது கட்சிகள்! கொடிகள்! தலைவரைப் புகழ்தல்! கட்சிக்காரரே சுற்றம் - நாட்டு மக்கள் என்பனதான்! நமது நாட்டு மக்களோ தேர்தலில் வாக்களிப்பதை ஒரு தீராக் கடமையாகச் செய்து முடிக்கின்றனர். ஆனால் அரசியல் அறிவு இல்லாது போனாலும் மக்கள் கட்சிகளின் போக்கில்