பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



வாழ்க்கையென்பது கட்டிமுடிக்கப் பெற்ற மாளிகையல்ல. மனிதன் முயன்று கட்டிக் கொண்டே இருக்கும் மாளிகை. மனிதன் வாழத் தொடங்கினால் அவன் வாழ்வு வளரும்; மாற்றங்களைப் பெறும். “விதிக்கு விதி செய்வதை”க் கம்பனும் ஏற்றுப் பாடியிருக்கிறான், “ஊழையும் உப்பக்கம் காணலாம்” என்பது வள்ளுவம். ஊழ் - விதி அவனவனுடைய தனி வாழ்க்கையில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அது எப்படி சமூகத்தைப் பாதிப்படையச் செய்ய இயலும்? ஒரு மனிதனைத் தாழ்த்தப்பட்டவனென்றும் ஏழை என்றும் தாழ்த்தவோ ஒடுக்கவோ எந்த விதிமுறைக்கு அதிகாரம் வந்தது? அந்த அதிகாரத்தை வழங்கியவர் யார்? ஒழுக்கங்கள்தான் காரணம் என்றால் நடைமுறையில் அப்படி அல்லவே! இன்று தாழ்த்தப்பட்டவன் பிறக்கிறான். பார்ப்பனன் பிறக்கிறான். ஏழை பிறக்கிறான். முதலாளி பிறக்கிறான். இது சாத்தியமா? நடைமுறையா? அல்லது நியாயம்தானா? இல்லை! இந்த அநியாயங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இவை சமூக நீதியின்மையால் சமூக விதிகளை மீறிய கொடிய செயல்கள்! சமூக ஊழ் என்றும் கூறலாம். சமூக விதி, தனி மனிதனைப் பாதிக்கிறது. தனி மனித விதி சமூகத்தையும் பாதிக்கிறது. ஆதலால் மனிதனின் வாழ்க்கை விதியை நிர்ணயிப்பது அவனுடைய அறிவறிந்த ஆள்வினையே! இடையீடு இல்லாது சோர்வு இல்லாது செய்யும் முயற்சிகளே! நாளும் நாளும் வளரும் உழைப்பின் ஆக்கமே மானுடத்தின் வாழ்க்கை பயன்; எல்லாம்! ஊழே துணை செய்யாது போனாலும் மனிதன் வெற்றி பெறுவான்! மனிதன் தலை விதியை அவனே நிர்ணயிக்கிறான்! -

அறியாமை

“அறிவுடையார் எல்லாம் உடையார்” என்றது திருக்குறள்! அறிவே வாழ்க்கையைப் பயனுடைய வகையில் இயக்குவது. நாட்டுக்குப் பெருமை, மக்கள் தொகையின் அளவல்ல; அறிவுடைய மக்கள், அறிவறிந்த ஆள்வினை