பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

117


யுடைய மக்கள் சிலர் வாழ்ந்தாலும் அந்த நாடு வளரும்! பெருமையுறும். அறிவில்லாத மக்கள் நாட்டுக்குச் சுமை! அறிவில்லாத மக்கள் தங்களுக்குத் தாங்களே தீமை செய்து கொள்வர். மற்றவர்களுக்கும் காரணமில்லாமலே துன்ப மிழைப்பர்; அறிவில்லாதவர்களே மூட நம்பிக்கைகளில் முடக்குண்டு கிடப்பர். அறிவில்லாதவர்கள் தாமும் வாழார்; மற்றவர்களையும் வாழவிடார். அறிவில்லாதவர்கள் சிந்திக்க மறந்து விடுவர். இல்லை, இல்லை! சிந்திக்க மறுத்துவிடுவர். அறிவில்லாதவர்கள் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்; கேட்டாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்; செயல்பட மாட்டார்கள்; வாழவும் மாட்டார்கள். அறிவில்லாதவர்கள் கழனியில் பதர்ப் பயிர் அனையர்; ஆம், தலை விரித்தாடுவர்! அகங்காரத்துடனிருப்பர். இவர்கள் மூர்க்கர்கள். ஒரு பெரிய கொடுமை அதிசயம் இவர்களுக்கு தமக்கு அறிவில்லை என்பது தெரியாததுதான். இல்லை என்று தெரிந்து கொண்டால்தான் தேடுவார்களே!

அறியாமை கொடுமையானது. அறியாமை சாபக்கேடு! அறிவு ஆக்கம் அறிவு இன்பம், அறிவு வாழச் செய்யும்; அறிவு புகழ் சேர்க்கும்; அறிவு பெரியாராக்கும்.

குழந்தை பிறக்கிறது! மனிதன் பிறக்கவில்லை. மனிதன் உருவாகின்றான்! மனிதன் உருவாக்கப்படுகின்றான். குழந்தை மனிதனாவது உருவத்தால் மட்டும் அல்ல. அறிவால் தான் மனிதன் உருவாகின்றான்! அறிவில்லாதவர்கள் உருவத்தில் வளர்ந்தாலும் “மக்களே போல்வர்” தான்! உறுப்பொத்தல் மக்கள் ஒப்பல்ல. பதப்படுத்தப்படாத சக்காப்பொருள் தொழிலுக்குப் பயன்படாது. அதுபோலத்தான் அறிவு நலம் இல்லாத மனிதன் எதற்கும் பயன்படான். அறிவு நலஞ் சார்ந்த வாழ்க்கையில் வளர்ச்சி உண்டு; மாற்றங்கள் உண்டு; வளம் சேரும்; வாழ்க்கை சிறக்கும்; புகழ் பூத்த வாழ்வு அமையும். அறிவு குற்றங்களினின்று மீட்டு எடுக்கும். அறிவு குறைகளைத் தவிர்க்கத் துணை செய்யும்.