பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்க்கையைப் பயனுடையதாக்க வேண்டும் வாழ்க்கையைப் பயனுடையதாக்குவதற்குப் பெரிய தடையாக இருப்பது அறியாமையேயாம். திருக்குறள்,

“பிறப்பென்னும் பேதைமை”

என்று கூறும்.

"இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை”

என்றும் சான்றோர் கூறுவர், அறியாமையினின்று விடுதலை பெற்றால்தான் வாழ்க்கை வளரும்; மாறும். எதையும் ஏன்? எதனால்? என்று கேள்வி கேட்டு எப்படி சிக்கலுக்குத் தீர்வு காண்பது என்று எண்ணி ஆய்வு செய்து தீர்வு கண்டு வாழ்தலுக்கு அறிவே முதல்; முடிவு; எல்லாம்!

மனிதன் தனது புலன்களையும் பொறிகளையும் முறையாக இயக்கிப் பயன் கொள்ளத் துணை செய்வது அறிவு. துன்பத் தொடக்கின்றி வாழ்வதற்கு அறிவு பயன்படுகிறது. அறிவு பலதிறத்தன. எழுதப் படிக்கத் தெரியாதவர்களிடம் கூட அறிவு இருக்கும். இது பொது அறிவு. வாழ்வின் அடிப்படையொடு தொடர்புள்ள இந்த அறிவு வளமான வாழ்க்கைக்குப் போதாது. -

அறிவு வளர்ச்சிக்குக் கல்வி முதல் தேவை. திருக்குறள் ‘கற்க’ என்று ஆணையிட்டது. கல்வி, புலன்களின் விரிவாக்கத்திற்குப் பயன்படும். கல்வி, பொறிகளிடத்தில் பண்பட்ட செயல்முறையினைக் காணும். கல்வி, சென்ற பல தலைமுறையினருடைய வாழ்க்கையை அறிந்து கொள்ளத் துணை செய்கிறது. கல்வி, வாழ்க்கையின் இலக்குகளை ஏற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. அந்த இலக்குகளை அடையவும் துணை செய்கிறது. அறிவியல் வளர்ச்சிக்குப் பின் தான் இலக்கியப் படைப்பு, தொழில் நுட்பம், பொருளியல், சமயநெறிகள், அரசியல் முதலியன.