பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

121



கல்வி கற்பதன் மூலமே அறிவு ஆக்கம் பெற்றுவிடாது கற்றார் வாய்க் கேட்டது அவசியம். ஏன்? கேட்டறிவது மிகமிக அவசியம். மூளைகள் பலவிதம். ஒரு மனிதனின் மூளை சென்ற வழியே செல்லும். இது பலருக்கும் இயல்பு. சிந்திக்கும் பழக்கம் உடைய சிலர் விதிவிலக்காய் பலமுறை கற்றுச் சிந்தித்துப் பொருள் காண்பர்; மெய்ப் பொருள் காண்பர் தெளிவு காண்பர். ஆயினும் பல மூளைகளின் அறிவு ஒரு சேரத் துணை செய்வது கேட்டறியும் முறையில் தான். “கற்றில னாயினும் கேட்க!” என்றது திருக்குறள்.

அறிவு மனிதனைத் துன்பத்திலிருந்து மீட்டு எடுப்பது. அறிவு, நாள்தோறும் புத்துயிர்ப்புத் தந்து புதுவாழ்வு தருவது. இந்த அறிவே பூரணத்துவம் அமைந்த வாழ்க்கைக்கு முதல்.

அறிவியல்

அறிவியல் என்பது என்ன? நம்முடைய உடல் இயங்குகிறது; உயிர் செயற்படுகிறது. நம்மைச் சுற்றியிருக்கின்ற உலகம் இயங்குகிறது. ஓயாது இயங்கித் தொழிற்படுவதே இயற்கை. இவற்றோடு பிறந்து வளரும் மனிதன் - வாழும் மனிதன் இந்த இயக்கங்களின் காரணம் என்ன? ஏன்? என்று வினாத் தொடுக்கின்றானே அந்த வினாத்தான் அறிவியலின் தொடக்கம். அந்த வினாக்களுக்குக் காணும் விடைகளே அறிவியல்! அறிவியலின் வாய்பாடுகள் அனைத்தும் விடைகளே. நிலத்தின் இயல்பு, புவிக்கோள் இயக்கம், தண்ணிரின் தண்மை, வளி மண்டலம், எரி சக்தி என வாழ்க்கைக்குத் துணையாயமைந்து கிடப்பனவற்றை யெல்லாம் பற்றி அறிதலே அறிவியல்.

இந்த அறிவியல் தொடங்கி உலகளாவியதாக வளர்ந்து வந்துள்ளது. இன்று மனிதனுடைய ஆய்வுப் புலன் நுழையாத துறை இல்லை. விண்ணும் மண்ணும். இன்று மனிதனுடைய அறிவாராய்ச்சிக்குக் களங்களாகிவிட்டன. நிலத்தியல்பும், நீரின் இயல்பும், கதிரவனின் இயல்பும், வளிமண்டலத்தின்.