பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயக்க இயல்பும் இன்று அறியப்படுகின்றன, உணரப்படுகின்றன. ஏன்? ஐம்பூதங்களைக் கண்டு அஞ்சி வாழ்ந்த மனிதன் இன்று அவற்றை அடக்கி ஆண்டனுபவிக்கக் கற்றுக் கொண்டுவிட்டான். மனிதன் பிறந்த நாளன்றே அவனைத் துன்பமும் மரணமும் தொடர்ந்தது. இன்றோ மனிதன் மரணத்தைத் தள்ளி வைத்துக் கொண்டே போகிறான். காலப் போக்கில் மரணமிலாப் பெருவாழ்வும் அடைந்துவிடுவான். ஆனாலும் மனிதனின் பேராசைகளும் இயற்கை நிகழ்வுகளும் புதுப்புதுத் துன்பத் தொடக்குகளை உருவாக்கிய வண்ணம் இருக்கின்றன. இன்று போகும் போக்கைப் பார்த்தால் மானுடம் தோற்கும் போலத் தெரிகிறது. அறிந்தும் சுற்றுப்புறச் சூழலைக் கெடுக்கிறான் மனிதன். பகையும் போரும் கொடியது என்று கற்கிறான்; உணர்கிறான். ஆயினும் போர்க் கருவிகளைச் செய்வதிலிருந்து அவன் இன்னமும் ஓய்வு பெறவில்லை. இது கடவுள் உலகம். ஆயினும் கடவுள் பெயராலேயே கலகங்களை உருவாக்குகின்றான். மனிதனுக்கு இன்னமும் வாழ்வில் விருப்பம் இல்லை. சகோதரத்துவத்தை அவன் உணர மறுக்கிறான். இன்றைய மனிதனுக்குச் சமாதானத்தில் வேட்கை இல்லை. அமைதியில் அவனுக்கு நாட்டம் இல்லை. ஐயோ, பாவம்! கையில் விளக்கைப் பிடித்துக் கொண்டே கிணற்றில் விழுகின்றான்.

அறிவியல் வளரத் தொடங்கிய நிலையிலேயே தொழில் நுட்பமும் வளரத் தலைப்பட்டது. அறிவியலை அறிந்து கொள்வது, தொழில் நுட்பத்தைக் காண்பது ஏன்? அறிவியல் எப்படி வளர்ந்தது? மனிதன் கருவிகளைக் கண்ட காலமே தொழில் நுட்பம் தொடங்கிய காலம்! மரங்களிலிருந்து காய்த்தவைகள் விழுகின்றன. பட்டுப்போன குச்சிகள் விழுகின்றன. பட்டுப்போன குச்சிகள் விழுகின்ற வேகத்தில் மண்ணில் குத்திக் கொள்கின்றன. காய்கள் விழுந்த இடத்தில் பள்ளம் விழுகிறது. இதனை ஆராய்ந்த மனிதன் நிலத்தை உழுது பயன்படுத்த முடியும் என்று அரிகின்றான். கலப்பை