பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சுரண்டியே வாழ்கிறார்கள். இதனால் நிலம் பூசாரத்தை இழக்கின்றது. ஒரோவழி உரமிட்டாலும் இரசாயன உரங்கள் - யூரியா போன்றவை உண்மையில் உரங்களே அல்ல. அவை நிலத்தில் பற்றாக்குறை நிலையில் உள்ள உரத்தைப் பயிர் எடுத்துக் கொள்ளத் துணை செய்யும் ஒருவகையான கிரியா ஊக்கியேயாம். நிலத்திற்கு இயற்கை உரமே சாணம், குப்பை கலந்து மட்க வைத்த கம்போஸ்டு உரமே சிறந்த உரம். இந்த கம்போஸ்டு உரத்துடன் யூரியா ஒரு பங்கு கலந்து 48 மணி நேரம் வைத்திருந்து இடலாம். இது உரமேற்றிய உரம். பசுந்தழை உரம் நிறைய இடவேண்டும். இங்ஙணம் நிலத்தின் வளத்தைக் காப்பாற்ற வேண்டும்.

வேளாண்மைத் தொழில் சிறக்க மண் சோதனை செய்து மண்ணின் தரத்தையும் உரத்தின் தேவையையும் அறிதல், நிலத்தைப் பண்படுத்தல், நிலத்திற்கேற்ப பயிர் தேர்வு செய்தல், சுழற்சி முறையில் பயிர் மாற்றம் செய்தல், விதைகளை நேர்த்தி செய்தல், பயிர்ப் பாதுகாப்பு முதலிய துறைகள் உள்ளன. பயிர்ப் பாதுகாப்புத் துறையில் பூச்சிகளை எதிர்த்துப் போராட இன்று ஒட்டுண்ணி என்றும் “உயிர்க் குயிர் பகை” என்றும் சொல்லப் பெறுபவை வந்துவிட்டன. இது ஒரு நல்ல முன்னேற்றம். நிலத்தை வளமாகப் பாதுகாக்காமல் மண் அரிப்புக்கு இரையாக்குகிறார்கள். மண் அரிப்பு என்றால் என்ன? நிலத்தின் மேற்பரப்பில் உள்ள ஒரு முழம் உயரம் படிந்துள்ள மணலே கருத்தாங்கும் ஆற்றலுடையது. இதனை மண்கண்டம் என்று கூறுவர். இந்த மண் தோன்றுவதற்குப் பல நூறாயிரம் ஆண்டுகள் ஆகியுள்ளன. “கல்தோன்றி மண் தோன்றாக் காலம்” என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறும். இந்த மண் கண்டத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். தன் போக்காகத் தண்ணிர் ஓடுதலால் ஏற்படுவது மண் அரிப்பு. வரன் முறையில்லாமல் நிலத்தில் கால்நடைகள் மேய்ப்பது, புயல், காற்று இவைகளால் மண் அரிப்பு ஏற்படுகிறது. நிலம்