பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சம்பாதிக்கும் முறை வளர்ந்து பரிசுச் சீட்டில் வந்து நிற்கிறது. இன்று அரசுகளே பரிசுச் சீட்டுகள் விற்கும் நிலைக்கு வந்துள்ளமை வேதனைக்குரிய செய்தி. பொருள் ஈட்டுதலுக்குரிய புதிய புதிய வாயில்களைக் கண்டாகவேண்டும். பொருளை ஈட்டும் துறைகள் எண்ணியவாக நாளும் பெருக வேண்டும்; பொருள் ஈட்டவேண்டும். ஈட்டும் பொருளைச் சேமிக்க வேண்டும். சேமித்த பொருளை நலஞ்சார்ந்த வாழ்க்கைக்காகத் திட்டமிட்டுச் செலவழிக்க வேண்டும்.

பொருள் ஈட்டல் - செலவிடுதலில் திட்டமிடும் அறிவு தேவை. “திட்டமிலாதான் வாழ்க்கை தேடுவாரற்றுப் போகும்” என்பது பழமொழி. பொருள் ஈட்டுவதற்குப் பொருள் உற்பத்திக் களங்கள், பொருள் உற்பத்திக்குத் துணை செய்யும். கருவிகள், மனித சக்தி இவைகளுக்கு நமது நாட்டில் பற்றாக்குறை இல்லை. ஆனால், இவைகளைப் பயன்படுத்தி நாம் கால்பகுதிகூட இன்னமும் செல்வத்தை ஆக்கவில்லை. உடலால் உழைக்கும் குணம் வளரவில்லை. எழுத்தில், பொருளில் ‘போலி’ போல உழைப்பிலும் போலிகள் வந்துள்ளன. இதனாலேயே நாடு வளரும் நாடாகவே இருந்து வருகிறது. பொருள்கள் செய்து குவித்தால் மட்டும் போதாது. உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சமச்சீர் விநியோகம் செய்யப்பட வேண்டும். நமது நாட்டில் செல்வ விநியோக முறையில் ஏராளமான சீர்கேடுகள்! சுரண்டும் சமுதாய அமைப்பே கால்கொண்டிருக்கிறது. உழைப்புக்குத் தகுந்த ஊதியத்திற்கே போராட வேண்டியதிருக்கிறது. உழைப்பு, விலைப்பண்டம் ஆகிவிட்டது. சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் மிகுதி. பிறர் பங்கை, உழைப்பாளிகளின் பங்கைத் திருடி வாழ்பவர்கள் இன்று சமுதாயத்தில் வாழ்கின்றனர். உயர்நிலையில் வாழ்கின்றனர். ஆட்சியே அவர்களுக்காகத் தானே நடக்கிறது. இந்த அவலம் நீடிக்கும் வரையில் எப்படி எல்லாரும் இன்புற்று வாழமுடியும்? அதோடு ஊழ் - தலைவிதி தொடர்பான நம்பிக்கை வேறு, வாழ்க்கையின்