பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

139


பண்பு. "பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகல்" என்றது கலித்தொகை. ஆங்கில மொழியில் பழகும் பாங்கியல் சார்ந்த நூல்கள் நிறைய வந்துள்ளன. நமது மொழியில், அத்தகைய நூல்கள் மிகுதியாக வரவில்லை. நமக்கு ஒருவரோடு ஒருவர் பழகுவது, உறவை வளர்த்துக் கொள்வது என்பது இன்னமும் கடமையாகக் கருதப்பெறவில்லை. ஒருவர் ஒருவரைக் காணவும் கலந்து பேசிப் பழகவும் பணம் கேட்பார்கள் போலத் தெரிகிறது. ஏதாவது ஓர் அவசியம் பிடர் பிடித்துத் தள்ளினால் ஒழிய, காண்பதில்லை. இது வளரும் வாழ்க்கைக்குத் துணை செய்யாது. ஒருவரை ஒருவர் காண்பதும் பழகுவதும் கலந்து பேசுவதும் வாழ்க்கையின் வளர்ச்சிக்குக் கட்டாயத் தேவை. கேட்காத கடன் வராது. பார்க்காத பயிர் வளராது. பழகாத நட்பு வளராது என்பது ஆன்றோர் வாக்கு விபத்துக்கள் நிகழும் பொழுது காணப்பெறும் இனந்தெரியாது எழும் உணர்ச்சி ஏன் நன்மை செய்ய உருவாவதில்லை ? சமாதானம் ஏன் தோன்றவில்லை? "யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது” என்ற கம்பன் கண்ட மனித வாழ்வின் இலக்கண்ம் ஏன் இலக்கியமாகவில்லை? மனிதர்கள் சமூக வாழ்க்கை வாழத் தலைப்படவேண்டும். அப்போதுதான் அவனுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியும். இது உறுதி. இல்லையெனில் வெந்ததைத் தின்று கலகம் செய்து வெற்று மாந்தராகச் சாகவேண்டியதுதான்.

ஆம் கூடி வாழ்வது பலம்! மனிதர்கள் கூடி வாழ்வதற்குரிய வாயில்களே அதிகம்! வாய்ப்புக்களும் பலப்பல. இயற்கையாக அமைந்த உடல் அமைப்பு, தொழில் அமைவுகள் பால் வகைப் பிரிவுகள் கூடி வாழ்தலின் அவசியத்தை உணர்த்துகின்றன. கண்கள் மற்றவர்களைப் பார்த்துப் பழகும் அமைப்பிலேயே அமைந்துள்ளன. செவிகளும் மற்றவர்கள் கூறுவதைக் கேட்கவேயாம்! உலக மாந்தரைக் கண்டு அவர்தம் வாய்ச் சொல் கேட்டுப் பழகும்