பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மின்சாரத்துடன் இணைக்கப் பெற்ற கம்பி மின்சக்தி பெறுவதுபோல, நம்முடைய உள்ளம் கல்லாக-மண்ணாகஇரும்பாக இருந்தாலும் திருப்பாவைப் பாடல்களைப் பாடும்போது, இறைவனின் தண்ணருட்சாரலை நாமும் பெற்று அனுபவிக்கிறோம்.

2. சமய மறுமலர்ச்சி

தமிழினத்தின் வாழ்வு சமயப் பண்பிலே வளர்ந்து வளம் பெற்றது. வாழ்க்கைக் கடலில் வீசும் துன்பத்தை இன்பமாக மாற்றிக் கொடுப்பது சமயம். அன்பு பொருந்தியஅறந்தழுவிய-ஒழுக்கம் நிறைந்த நல்வாழ்வைக் கொடுக்கும் தகுதி சமயத்திற்கே உண்டு. சமயச் சார்பற்ற ஒழுக்கம் உலகில் நிலைபெற்றிருத்தல் இயலாது. தனிவாழ்வின் தேவைகள் நிறைந்துகொண்டிருக்கின்ற அளவுக்குத்தான் சமயச் சார்பற்ற ஒழுக்கம் நிலை பெற்றிருக்க முடியும். வாழ்க்கையில் தேவை பெருகி, அவை கிடைக்காதும் போகுமானால், ஒழுக்கம் சிதைந்து-எவ்வாற்றாலும் தேவையை நிறைவு செய்துகொள்ள மக்கள் தலைப்படுவர். சமய வாழ்வொன்றாலேயே நீதியையும் நேர்மையையும், ஒழுக்கத்தையும் காக்க முடியும். இதனை நன்குணர்ந்தே தமிழ் மக்கள் சமய வாழ்க்கையின் இன்றியமையாமையை வற்புறுத்தினர்.

தமிழர் கண்ட சமய வாழ்வு அகம், புறம் இரண்டும் ஒத்த சமய வாழ்வு. இரண்டும் இயைந்து கலக்காத வாழ்வு வாழ்வல்ல. அதனாலேயே அகமும் புறமும் (புறக் கருவிகள்) ஈடுபடுகின்ற வழிபாட்டு முறையைத் தமிழகத்துச் சமயம் வற்புறுத்துகின்றது. நமது சமயம் வழிபாட்டுக் கலையிலும் வாழ்த்துகின்ற பண்பிலும் மிகச் சிறந்து நிற்கின்றது. அதனால் வழிபாட்டுக்காக விண்ணை அளந்து காட்டுகின்ற பல நூற்றுக்கணக்கான ஆலயங்களை எடுத்து வழிபட்டனர். அதன் மூலம் அகத்தின் நல்லுணர்ச்சியைக் காத்துப்