பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

163


களுக்கும் இந்த நிலை தாங்கொணாத் துயரத்தைத் தந்தது. தேவார, திருவாசகங்கள் முழங்காத ஆலயங்கள் எதற்கு என்ற எண்ணம் இதயங்களில் எதிரொலித்தது. எண்ணம் பாழ்படுமா? இன்று தமிழ் நாட்டில் பல தேவாலயங்களில் அருமைத் தமிழில் அருச்சனையும் வழிபாடும் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டின் எல்லா ஆலயங்களிலும் முத்தமிழ் முழங்குங் காலம் விரைவில் வர மறுமலர்ச்சி வித்திட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் நாட்டின் தனித்த பண்பு சமயச் சண்டையில் ஈடுபடாது, பல்வேறு சமயங்களையும் உவப்புடன் ஒப்பக் கருதும் பண்பாடு ஆகும். இது தமிழர்களுக்கு இயற்கையிலேயே உண்டு. எனினும் இடையில் பல சந்தர்ப்பங்களில் சமய வெறியும் பூசல்களும் எழுந்தன. ஆனால் மறுபடியும் இன்று பிற சமய வெறுப்பின்றிச் சமயம் வளர்க்கப் பெறுகிறது. சமயத்துறையில் வெறுப்பும் காழ்ப்புங்கொள்ளாது பல்வேறு சமயங்களையும் ஒப்பக் கருதும் இன்றைய மறுமலர்ச்சி காலத்திற் கேற்ற மறுமலர்ச்சி; தேவையான மறுமலர்ச்சியுமாகும்.

சமயத்தின் பேரால் சாதிகள் பிறப்பிக்கப் பெற்றது உண்டு;இன்று சாதிகள் தகர்த்தெறியப் பெற்று வருகின்றன. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற பண்டைத் தமிழனின் குரல் மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கிறது. வாழ்க்கையிலும் கைக்கொள்ளப் பெறுகிறது. தமிழினம் ஓர் குலமாக ஒன்றுபட, சமயத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த மறுமலர்ச்சி வேண்டத் தக்கது; விரும்பத் தக்கது.

இங்ஙனம் தமிழ் நாட்டில் சமயத்துறையில் புதியதொரு பொலிவும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இம் மறுமலர்ச்சி இயக்கத்தில் ஆயிரக்கணக்கான ஆர்வமுடைய இளைஞர்களும், பெருமக்களும் ஈடுபட்டுள்ளனர். இத்தகு மறுமலர்ச்சியால்