பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

ஆகியவற்றையும் கருத்துள் கொள்ளவேண்டும். ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்வி நிலையங்களே தேவை. இதனால், தங்களுக்கு ஏற்றதுணையைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது (ப. 50). ஆசிரியர்கள் வட்டிக்கடை முதலிய துணைத்தொழில்களைச் செய்யும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் (ப. 58). ஆசிரியருடன் பெற்றோர் தம் ஒத்துழைப்பும் தேவை. அஞ்சல் தலையில் ஒட்டுதலுக்குரிய ஒருவகைப் பசை இருக்கிறது. ஆனாலும், அந்த்ப் பசை ஒட்டுதலுக்குப் போதாது. புறத்தே ஈரப்பசையைக் கூட்ட வேண்டும். அதுபோல, ஆசிரியர்ப் பணிக்கு பெற்றோர் ஒத்துழைப்புத் தேவை (ப. 85).தமிழ்மொழிவழிக் கல்வி உழுத நிலத்தில் பெய்த மழை போன்றது. ஆங்கிலவழிக் கல்வி கற்பாரையில் பெய்த மழைபோன்றது (ப. 79).

அறிவியல் கல்வி வேண்டும். அறிவியல் மக்களுக்கான அறிவியலாக அமைதல் வேண்டும். அறிவியல் கல்வி மூட நம்பிக்கையை ஒழித்தல் வேண்டும். சந்திரன் உள்ளிட்ட கிரகங்களைப் பற்றிய அறிவு இன்று வளர்ந்துள்ளது. இந்நிலையில் இனியும் நவக்கிரக வழிபாடு செய்யலாமா? இது பக்தித் துறையிலுள்ள மூடநம்பிக்கை (ப. 114). விதி மாற்றமுடியாதது என்ற கருத்து ஏற்புடையதன்று விதியின் அமைவை மாற்றமுடியாது எனின் பிறப்பு ஏன்? அறிவு ஏன்? கடவுள் ஏன்? மனிதனின் வாழ்க்கை விதியை நிர்ணயிப்பது அவனது அறிவறிந்த ஆள்வினையே (ப. 116).

மக்களுக்கு அரசியல் அறிவு கட்டாயம் வேண்டும். தேர்தலில் அளிக்கப்பெற்ற வாக்குகளில் 50% வாக்குகள் பெறாத கட்சிகள் ஆட்சி அமைக்க அனுமதி இருத்தல்கூடாது (ப. 144) என்பன போன்ற கருத்து மின்னல்கள் அடிகளாரின் கல்வியியல் கட்டுரைகளில் பளிச்சிடுகின்றன. அடிகளார்தம் சமயஇயல் கட்டுரைகள் தனித்தன்மை வாய்ந்தவை: சமரசம் பேசுகின்றவை. கடவுள் ஒருவரே என்று வற்புறுத்துகின்றவை. அனைத்துச் சமயத்தாரும் பின்பற்றத்தக்கவை. நம்மை இறைவன் படைத்தான் என்பது சரியான கருத்தல்ல ப. 165. கடவுள் பயங்கரப் பொருளல்ல (ப. 166 என அடித்து உரைக்கும் அடிகளார் சேக்கிழார், கச்சியப்பர், மணிவாசகர், அருணகிரிநாதர். விவேகானந்தர் முதலானோர்தம் கருத்துக்களை மையமிட்டு உரை நிகழ்த்தி உள்ளார். கடவுள் ஒருவரே மதங்கள் பலப்பல. இன்று மதங்கள் மானுடத்திற்கு நன்மை செய்யும் ஆற்றலை இழந்து விட்டன என்று சொல்லும் ப. 212 அடிகளார் எழுதும், எழுப்பும் வினாக்கள் மிகுந்த பொருளழுத்தம் உடையவை. இன்றைய உலகின் நிலை இது இதயம் இருப்பின் எண்ணுங்கள்!