பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யாவும் உருவாக்கப் பெற்றன என்பதனாலேயே எல்லாம் ஒன்று என்று கூறிவிடலாமா? கூற முடியுமா? அ, ஆ வை எடுத்து, எண்ணி, சிந்தித்துத் தொகுத்துக் கவிஞன் பெருமை செய்கின்றான். அவன் எடுத்து எண்ணி, சிந்தித்துத் தொகுத்ததற்கேற்ப அந்தக் காவியம், கவிதை சிறப்புப் பெறுகிறது. அது போல, எல்லாவற்றையும் கல் என்று கூறிவிடலாமா? சிற்பி எப்படி எண்ணி சிந்தித்துச் செதுக்குகின்றானோ அதற்கேற்ப அந்தச் சிலையும் சிறப்புப் பெறுகிறது.

திருக்கோயில்களில் உள்ள மூர்த்திகளைத் திரு உருவங்களாக எண்ணிப் பார்ப்பது பாவம். 'இவன் அவன்' என்ற மேலான நோக்கோடு பார்க்க வேண்டும். அவனையே இறைவனாக எண்ணிக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க வேண்டும்.

செவிப்புலன் இல்லாதவனுக்கு ஒலிபெருக்கி கேட்காது. கண்பார்வை இல்லாதவனுக்கு ஒளி தெரியுமா? அதுபோல நெஞ்சம் தூய்மையாக இருந்தால் இறைவனைக் காணலாம். நெஞ்சமே அவனுக்கு-இறைவனுக்கு இடமாக வேண்டும். இறைவனைக் காண இருதயம் தேவை;அந்த இருதயத்தைப் பிசைந்து கனிவாக்க-காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கத்தான் வழிபாடு. வழிபாட்டால் உள்ளுணர்ச்சி ஆன்ம உணர்வு பெருக வேண்டும். இல்லையானால் வழிபாட்டால் ஒரு பயனுமில்லை. அதற்கு அரற்றி அழுது தொழவேண்டும்.

இறைவனை நாம் எங்கும் தேடிப்போக வேண்டியதில்லை. இறைவன் நமக்காக இங்கு இறங்கி வருகின்றான். வான்பழித்து இம்மண் புகுந்து நம்மை அவன் ஆட்கொள்ளுகிறான். தினமும் காலையில் வழிபாடு செய்யுங்கள். திருக்குறள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல் - திருவாசகம் நம்மை உயர்ந்த அனுபவத்திற்கே அழைத்துச் செல்லும் வழிபாட்டு நூல். அதை ஓதுவதும் வழிபடுவதுமே வழிபாடுதான்.