பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

169


கவிதையைப் பாராட்டுவது, கவிஞனுக்கு மரியாதை செலுத்துவது. ஓவியத்தைப் பாராட்டுவது ஓவியனுக்கு மரியாதை செய்வதுபோல, உலக மனிதர்களுக்குச் சேவை செய்வதும், மரியாதை செய்வதும் உலக மக்களின் தலைவனான தாயும் தந்தையுமான இறைவனுக்கு மரியாதை செய்வதுபோல.

தேவைக்கு ஏற்ப அறம் செய்ய வேண்டும். அதை செய்வதற்கு முயற்சிதான் வேண்டும். வாழ்க்கை முழுவதும் வழிபாடாக இருக்க வேண்டும். அந்த வழிபாடு சிறக்க திருக்கோவிலுக்கு வந்து அவனையே காண வேண்டும். அத்தகைய வழிபாடு பரவினால், உலகம் ஒன்றே மனிதர்கள் யாவரும் ஒரே குலம் 'இன்பமே எந்நாளும் துன்பமில்லை' என்ற சங்கநாதம் முழங்கும்.

4. காணப் படாத கடவுள்

மக்கள் அறிவும் உணர்வும் பெற்று உலகத்தைப் பார்க்கத் தொடங்கிய காலத்தில் கடவுட் கொள்கை எழுந்தது.

காணப்படும் இவ் வுலகினை ஆக்கி, அழித்து நடாத்துகின்ற ஒரு முதற் பொருளை உணர்ந்தனர் மக்கள்.'அம் முதற் பொருள், தோற்றமும் ஈறும் இல்லாதது. பேராற்றலும் பேரருளும் உடையது என்றெல்லாம் திருந்திய அறிவின் துணைகொண்டு தெரிந்து தெளிந்தனர். கண்டதைக் கொண்டு காணாததை உணர்தல் அறிவின் இயற்கை ஆற்றின் புதுநீர்ப் பெருக்கைக் கண்டபொழுது "தொலைவில் மழை பெய்தது” என்றும், கூரையின்மேற் புகையைக் கண்ட காலத்து, "வீட்டினுள் நெருப்புளது” என்றும் உணர்ந்து கூறுதல் மக்கள் இயல்பு. அதுபோல இவ்வுலகின் வியத்தகு அமைதிகளைக் கண்டு, இவைகளை இங்ஙனம் அமைத்தவனான பேரருளும் பேராற்றலும் உடைய முதல்வன் ஒருவன்

கு.XV.12.