பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திறம்பட வாழ்ந்தனர். இவ் விரு துறை வாழ்வியல் மக்களிடத்தும் அன்புணர்ச்சியும், அருளுணர்ச்சியும், அறவுணர்ச்சியும் அமைந்து கிடந்தன. மக்கள், நெஞ்சந்தோய்ந்த கடவுட் பற்றும், சிந்தனையிற் சிறந்த வழிபாட்டுணர்ச்சியும், பக்தி உணர்ச்சியும் கொண்டிருந்தனர்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பான் தலைசிறந்த மன்னன்.அவன் தென்குமரி நாட்டின் பஃறுளி ஆறு கடல் கொள்ளப்படுவதற்குமுன் இருந்தவன். அதாவது ஏறக்குறைய பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவன். இம் மன்னர் பெருமானைக் காரிகிழார் என்ற சிவநெறிச் செல்வர் பாடியுள்ளார். காரிகிழாரின் பாடல் செவியறிவுறூஉத் துறையில் அமைந்திருக்கிறது. இப்பாடல் வழுதியின் பண்புகளைத் தெளிவுபடக் கூறுகிறது. அதோடு அவனுக்குப் பல அறவுரைகளையும் எடுத்தியம்புகிறது. அவன் வேள்விகள் பல வேட்டவன்; மாற்றாரை அறப் போரால் வென்று மறக்கள வேள்வி புரிந்தோன்; வரையாது கொடுக்கும் வள்ளல். இத்தகு மன்னர் மன்னனுக்குப் புலவர் பெருமகனார் தந்த அறவுரை,

"யாருக்கும் தாழாத கொற்றக் குடை தாழ்க’

என்பது. இது அவரது ஆணை. இது புதினமாய்த் தோன்றவில்லையா? மன்னனது குடை தாழ்க என்று சொல்வதா?

பிறவா யாக்கைப் பெரியோனாகிய முக்கட் செல்வரின் நகரை கோயிலை வலஞ் செய்யத் தாழட்டும் என்றுதான் புலவர் பாடுகின்றார். நகரைப்போல அகன்று பெரிதாய்ச் சிவபெருமானுக்குத் திருக்கோயில் அவ்வளவு பழைய காலத்திலேயே அமைந்திருந்தது என்று இதிலிருந்து தெரிகிறது. சங்க இலக்கியங்களில் திருக்கோயில்களை நகரம் என்றே குறிக்கப்பட்டுள்ளன.

"கட்வுட் கடிநகர்” என்று கற்றவர்கள் போற்றும் கலித்தொகை பேசுகிறது. மாலை நேரத்தில் தமது அருமைப்