பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஜனநாயகத் தத்துவத்தினுடைய அடிப்படை "மக்களை மக்களாக மதிப்பிடுதல்" என்று ஜான் ஆபிரகாம் லிங்கன் கூறுகின்றார். இது மறுக்க முடியாத தொன்று. மனம் படைத்த மக்களை அன்புணர்ச்சியின்றிப் பண்பாட்டின் நெறியறியாத நிலையிலே கேவலமாக நடத்துதல் கொடுமையிலுங் கொடுமை, ஜனநாயக வேட்கை இன்று எங்கும் பூரணமாக மலர்ந்துள்ளது.

ஜனநாயகத் தத்துவம் தமிழகத்திற்குப் புதியதல்ல. "ஒன்றே குலம்" என்று பல ஆயிர ஆண்டுகளுக்கு முன்னேயே தமிழின் கூறினான். சங்க காலத் தமிழகத்தில் பூரண ஜனநாயக உணர்ச்சி மலர்ந்திருந்தது.

"பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை இகழ்தல் அதனிலு மிலமே”

என்பது தமிழன் கண்ட ஜனநாயகம். ஜனநாயகத் தத்துவம் பூரண அன்பின் அடிப்படையில் தோன்றி வளர்ந்து வளம் பெற்றது. ஜனநாயகத் தத்துவத்தின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் அடிப்படை சமயம். ஜனநாயகத் தத்துவத்தின் தந்தைகளும் காவலர்களும் ஒருபொழுதும் சமய நெறிகளுக்கு மாறுபட்டார்களில்லை.

உண்மைச் சமய வாழ்வு அருகினமையினாலேயே மக்களிடையே இனவெறி தலைகாட்டியது-அதிகார்வெறி வீறிட்டெழுந்தது. இந்நிலை முதிர்ந்த போதுதான் ஜனநாயகக் கொள்கைக்கு உயிரூட்டி அதை நிலைநாட்டும் மனப்பான்மை உலகில் ஓங்கியது. ஆனால் சமயக் கொள்கைக்கு விரோதமாகவோ, அல்லது சமயத்தை அழிக்கும் எண்ணத்துடனோ ஜனநாயகம் தோன்றவில்லை ஜனநாயகத்தை வளர்ப்பதின் மூலம் சமயத்தையும் வளர்த்து உண்மைச் சமய வாழ்வை மக்களிடையே நிலவச் செய்யலாம் என்ற நம்பிக்கையோடு ஜனநாயகத் தத்துவம் தோற்றுவிக்கப்பட்டது என்று கூடச் சொல்லலாம். மனப் பிளவுபட்டுக்