பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று ஆணையிடுகின்றது. தேவையை நிறைவு செய்து கொள்வதற்காகக்கூட இப் பண்புணர்ச்சிகளைக் கைவிடலாகாது. அங்ஙணம் கைவிடுபவர்கள் அறிவுடையவர்களல்லர் என்று தமிழ்மகள் கூறுகின்றாள். தலைவன் பொருள்வயிற் பிரியப் போகின்றான் என்ற செய்தியைக் கேட்ட தலைவி, தோழியிடம் அறம் பேசுகின்றாள். அருளையும் அன்பையும் துறந்து பொருளீட்டுதல் தமிழ்ப் பண்பாடல்ல, அறிவுடமையுமல்ல.

"அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்"

என்பது தமிழ்மறை. "இதனை அறிந்தும் தலைவர் பொருள் வயின் அகலுவாராயின், அவர் அறிவுடையவரே ஆகுக" என்று இகழ்ச்சிக் குறிப்பில் பேசுகின்றாள் தலைமகள்.

"அருளுமன்பு நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின்
உரவோ ருரவோ ராக"

என்பது பாடல். அருளும் அன்பும் தவழ்ந்த வாழ்க்கையே வாழ்க்கை என்று பேசும் தமிழ் நாகரிகத்தை என்னென்போம்!

உலகத் தொடர்பு நிறைந்த வாழ்க்கையில் எங்கும் அன்பைக் கண்டு, அன்பைச் செலுத்துவது அருள். தொடர்புடையார்மாட்டு எழும் பரிவுணர்ச்சி அன்பு. ஆனால், கடவுட் காட்சியில் கலந்த வாழ்க்கையில் வேறொரு துறையாக அமைந்து விளக்கம் நல்குகிறது. அங்கு முழுமுதற் பொருள் உயிர்கள் மாட்டுக் காட்டும் பரிவுணர்ச்சி அருள். அவ் அருளைப் பெறுவதற்காக ஆண்டவன்பால் உயிர்கள் கொள்ளும் பரிவே அன்பு அவ் அன்பும் அருளும் கலக்கின்ற பொழுது அறம் தோன்றுகிறது. இதனை,