பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழிகளாகும். மறைமட்டும் அன்று. அவர்களது நூல் சிறந்த இலக்கியமுமாகும்.

அட்சன் என்ற ஆங்கிலப் புலவர், "மொழியின் வாயிலாக வாழ்க்கை முறையினை எடுத்துக்காட்டுவது இலக்கியமாகும்."[* 1] என்று கூறியுள்ளார். இந்த முறையில் இருபுலவர்களும் வாழும் வகையை வகைபடக் கூறியுள்ளார்க்ள். அவர்கள் தாம் கண்டதை, அப்படியே உள்ளதை உள்ள வாறே கூறியுள்ளார்கள். சிறந்த கருத்துக்கள் நிறைந்திருக் கின்றன. விஸ்வகண்ட் மார்லி என்ற பேராசிரியர் "இலக்கியம் மக்களுக்கு நல்லொழுக்கம் புகட்டுவதில் ஒரு சிறந்த கருவியாக விளங்குகிறது"[t 1] எனக் கூறியாங்கு 'திருக்குறளும் திருவாசகமும்' ஈடும் இணையு மற்றிருக்கின்றன. இந்த நிலையில் இருபெரு மக்களது நூல்களும் சாலச் சிறந்தனவாகத் திகழ்கின்றன.

இருவரும் உலக மகாகவிகள். அவர்களது வாய் மொழிகள் உலகத்தவரால் போற்றப்பட்டுப் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இன்றையத் தமிழகத்திலே வள்ளுவரை அறிந்திருப்பாரே அன்றி வாதவூரரை அறிந்திருக்க மாட்டார்கள். வள்ளுவரைக்கூட அவருடைய சுயரூபத்தில் பார்த்திருக்கமாட்டார்கள் என்றே சொல்லவேண்டும். வள்ளுவரை நாத்திகராக ஆக்கப் பெரிதும் முயல்கின்றனர். முதல் நான்கு அதிகாரங்கள் அவர் இயற்றியதல்ல என்று அறியாமையால் அரற்றுகின்றனர். வள்ளுவர் வாய்மொழியில் தொட்ட தொட்ட இடமெல்லாம் தெய்வ மணம் வீசுவதை அறியாமையின் காரணமாக அறியாமல் திகைத்து நிற்கின்றனர். ஆனால் இந்த அளவுக்கு


  1. Literature isthus fundamentally an expression of life through the medium of Language.
  1. Literature is one of the most powerful instruments for forming character.