பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

195


சமுதாயத்தில் கால் கொள்கிறது. பண்ணையடிமைச் சமுதாயத்தில் நிலப்புரத்துவத்தைத் தொடர்ந்து சுதந்திர மின்றிக் கொத்தடிமை செய்யும் அடிமைச் சமுதாயம் தோன்றுகிறது; தோற்றுவிக்கப்படுகிறது; நிலைப்படுத்தப்படுகிறது. இங்ஙனம் கொத்தடிமைச் சமுதாயமாக்கப் பெற்ற உழவர்கள், உடல் உழைப்பாளர்கள் ஒதுக்கப் பெற்றனர். அவர்களுக்குச் சராசரி மனித உரிமைகள் கூட வழங்கப்பெறுவதில்லை. திருக்கோயில் வழிபாட்டுரிமையும் கூட மறுக்கப்பட்டது.

நிலப் பிரபுத்துவமும் சாதிமுறைகளும் கைகோத்து வளர்ந்தன. உயர் சாதியினர் நிலப் பிரபுக்களாயினர். நிலப் பிரபுக்கள் உயர் சாதியாயினர். ஒரோவழி உயர் சாதியினர் ஆகாவிடினும் சமாதான நிலையில் அடுத்த அடுத்த சாதியினர் என்ற தரத்தைப் பெற்றனர். இத்தகைய நிலப் பிரபுத்துவ பண்ணையடிமைச் சமுதாயத்தில்தான், தீண்டத் தகாதவர்களின் சமூகத்தில்தான் திருநாளைப் போவார் தோன்றுகிறார். திருநாளைப் போவார், தீண்டத்தகாதவர்களின் வழிபாட்டுரிமைக்காகப் போர்க்கொடி தூக்குகிறார். உயர் வேதியர் குலம் மறுக்கிறது. உயர் வேதியர் குலம், திருநாளைப் போவாரைத் தீயிலிட்டுப் பொசுக்குகிறது. ஆனால், ஆன்மீகத் தரத்தால், பத்திமையின் மேம்பாட்டால் தீயிலிடப் பெற்ற திருநாளைப் போவார் வெந்து மடியாமல் வெளியே வருகிறார். அவர்தம் ஆற்றல்கண்டு தில்லைவாழ் அந்தணர்கள் திருநாளைப் போவாரை "ஐயர்" என்று போற்றுகின்றனர். இது வரலாறு. சேக்கிழார் திருநாளைப் போவார் மூலம் மனித குலத்தில் தீண்டப்படாதவர்களின் உரிமைக்காகப் போராடுகிறார்.

பழந்தமிழகத்தில் தீண்டாமையைப் போலவே தமிழகத்தை வருத்திய தீமைகளில் சாதிவேற்றுமையும் ஒன்று. சேக்கிழார் தமது நூலில் சாதிப் பெயர்களை குலப் பெயர்களை அப்படியே கையாள்கிறார். இது அன்று இருந்த நிலை. ஆனால், சேக்கிழார் இந்த சாதிவேற்றுமைகளுக்கு ஆட்பட்டி