பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

197


வழிபாட்டு உரிமையை இழந்ததால்தானே பத்திமையை இழந்தனர்? ஞானத்தை இழந்தனர்: சாதாரண மக்களுக்குக் கடவுட் கோயில் கடமைகள் இல்லாமல் போனதால் தானே மதம் மாறினர்! மதம் மாறிக் கொண்டிருக்கின்றனர்! கடமை இல்லாத சமுதாயத்தில் உரிமை இருக்காது! உரிமையில்லாத சமுதாயத்தில் சுரண்டி வாழும் வர்க்கம்தானே வளரும்? இன்றைய திருக்கோயில்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விடவில்லையா, என்ன? இந்த இழிவு நிலையிலிருந்து என்று மீள்வது? சேக்கிழார் செந்நெறி என்று உயிர்ப்புப் பெறும்? அருள் கூர்ந்து சிந்தனை செய்யுங்கள்! புறநூனூற்றுக் கவிஞன்.

ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பணிவார் பறைப்பப்
படைந்தோன் மன்றஅப் பண்பிலாளன்
இன்னாது அம்மஇவ் வுலகம்
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே!

(புறம் - 194)

என்று பாடினான். இயற்கை வழிப்பட்ட துன்பங்களைக் கூடக் கவிஞன் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை; இன்பதுன்பம் நிறைந்த இருவேறு நிலை வழிப்பட்ட சமுதாயத்தைக் கவிஞனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இச்சமுதாய அமைப்புக்குக் காரணம் படைப்பாளனாகவே இருந்தாலும் அவனைப் பண்பிலாதவன் என்று கவிஞன் ஏசுகிறான்! இன்னாதனவுள்ள உலகத்தை இனிய உலகாக அமைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறான்; போர்க்குணத்தோடு ஆர்ப்பரிக்கிறான்; மற்றவர்களையும் அழைக்கிறான்.

'இன்னாதம்ம இவ்வுலகம்! இனிய காண்க!' இது கவிஞனின் ஆர்ப்பரிப்புக் குரல்! இந்த விழுமிய கருத்துத் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் தமிழக வரலாற்றில்