பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாற்றமில்லை! தமிழகத்தின் வரலாறு சுமந்ததையே சுமந்து கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது! சுந்தரர் அவிநாசிக்குச் செல்கிறார்! அங்கு ஒரு வீட்டில் அழுகுரல்! பிறிதொரு வீட்டில் மங்கல ஒலி! இவ்விரண்டையும் நோக்கும் சுந்தரர்,

மறையோர் வாழும் அப்பதியின் மாடவீதி மருங்கணைவார்
நிறையும் செல்வத்து எதிர்மனைகள் இரண்டில்
                                      நிகழ்மங்கல இயங்கள்
அறையும் ஒலி ஒன்றினில்; ஒன்றில் அழுகைஒலி
                                      வந்தெழுதலும் ஆங்கு
உறையும் மறையோர்களை "இரண்டும் உடனே நிகழ்வது
                                      என்?" என்றார்.

(பெ.பு. வெள்ளானை-5)

என்று கேட்டதாகச் சேக்கிழார் பாடிக் காட்டுகிறார். அதனால், சேக்கிழார் துன்பமே இல்லாத ஒரு சமுதாயத்தைக் காண எண்ணி அம்முயற்சிக்குத் துணையாகவே காப்பியம் செய்தார். ஆனால், காப்பியத்தின் கருத்து, காலத்தை வென்று வளங்க முடியாமல் தமிழினம் சதி செய்து விட்டது இரங்கத் தக்க நிலை! இன்று இன்பமும் துன்பமும் இயற்கையில் நிறைந்த சமுதாயம் மட்டுமில்லை! துன்பம் செயற்கையிலும் உருவாக்கப்படுகிறது! சமுதாயம் நைந்து அவலநிலையை அடைந்து கொண்டிருக்கிறது. இதற்கு விடிவுகாலம் தோன்றுமா? சேக்கிழாரின் பெரியபுராணம் ஓதுதல் மட்டுமின்றி சேக்கிழாரின் நூற் கருத்துக்கள் வாழ்க்கையிற் செயற் பாட்டுக்கு என்றைக்குச் சேக்கிழாரின் ஆர்வலர்கள் முயலுகிறார்களோ அன்றே சேக்கிழார் நூல் தோன்றியதன் பயன் மானுடத்துக்குக் கிடைக்கும். அந்த நல்ல நாளை எதிர்பார்ப்பது இயல்பல்லவா? நல்ல நாள்கள் தானே வருவதன்று! நல்ல நாள் என்பது திருவருளும் சிந்தனையில் தோய்வும் அறிவறிந்த ஆள்வினையும் உடைய சான்றோரே நாட்களை நல்ல நாள்களாக்குகின்றனர். அத்தகைய நல்ல நாளை விரும்பித் தவம் செய்வோமாக! சேக்கிழார் செந்நெறி மலர்க!