பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தாங்கித் தாங்கிப் பழகிப்போய் விட்டனர்! போர்க்குணம் அறவே இல்லை, மழுங்கிப் போன மூளைகள்! இதற்குச் சராசரி மக்களா காரணம்? இல்லை! இந்துமத சாஸ்திரங்கள், புராணங்கள் ஓதும் கர்மபலன் நம்பிக்கையே காரணம்! அல்லற்படும் மக்கள் அவர்களுடைய ஏழ்மை முற்பிறப்புகளின் தொடர்ச்சி-பரிசு என்று இந்துமத போதகர்கள் மதக்குருமார்கள் சொல்லிச் சொல்லி நம்பவைத்து விட்டனர். இந்த மூடநம்பிக்கையிலிருந்து நமது நாட்டு மக்களை அருள் திரு விவேகானந்தர் மீட்க விரும்பினார்; அதற்காகப் போராடினார்! ஆனாலும் காரியம் நடக்கவில்லை!

1897 இல் கல்கத்தாவில் மார்வாடிகளின் அரவணைப்பில் வளரும் பசுப் பாதுகாப்பு சங்கத்தின் பிரசாரகரை நோக்கி விவேகானந்தர், "மத்திய இந்தியாவில் ஒன்பது லட்சம் மக்கள் பட்டினியால் சாகிறார்களே அவர்களைக் காப்பாற்றக் கூடாதா?" என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பசுப் பாதுகாப்பு சங்கப் பிரசாரகர் “பட்டினியில் சாவது கர்மாவின் விளைவு பாபத்தின் பயன்" என்று கூறுகிறார். இதனைக் கேட்ட விவேகானந்தர் கோபப்படுகிறார்! உணர்ச்சிவசப்பட்டு "என்ன பொய்யான பேச்சுக்கள்! மனிதர்கள் கர்மபலனால் சாகிறார்கள் என்று கூறுகிறார்களே, இந்த நாடு அடியோடு நாசமாகிவிட்டது" என்று கூறுகிறார்!

விவேகானந்தருக்குப் பிறகு ஒரு நூற்றாண்டு உருண்டோடி விட்டது. இப்போது இந்துமதத் தலைவர்கள் கர்மபலனை “ரேஷன்கார்டு" உவமை கூறி விளக்கி இதோபதேசம் செய்து கொண்டிருக்கின்றனர். எந்தாய் நாடே எப்போது விழிப்பாய்? உனக்கும் கர்மபலன் இருக்கிறதோ?

4. சாஸ்திரம் கற்பிக்க வேண்டும் - எப்போது?

நமது நாடு ஒரு வளரும் நாடு. ஆனால் நாடு முழுமையாக எப்போது வளரும்? நமது நாடு வளர என்ன தேவை? ஆலமரத்தின் ஒரு சிறு விதைக்குள் உயிர்ப்புச் சத்து