பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

அவள் மடியில் வைத்துக் கட்டுங்கள்! அதாவது நிலத்தில் குழி வெட்டிக் கழிவுப் பொருள்களை அந்தக் குழியில் போட்டு மூடுங்கள் அவள் அவற்றை உரமாக்கிப் பொன்மதிப்பில் உங்களுக்குத் தந்து மகிழ்வாள்.” என்ற சிந்தனை மிகத் தேவையானது. 'தண்ணீர் பட்ட பாடு’ என்று பணத்தைத் தண்ணீரைப் போல் செலவழிக்கின்றார்கள் என்றும் கூறுவார்கள். இது மிகத் தவறு. தண்ணீரைச் சேமித்துச் செலவழிக்கத் தெரியாததால் தான் கர்நாடகத் தோடு சண்டைபோட வேண்டிய நிலை! தண்ணீரை, காற்றைப் பற்றி விழிப்புணர்வு மிக்க கருத்துக்கள் இன்றையக் காலத்தில் அவசியமான கருத்துக்கள். ‘வாழ்க்கை நெறி - கார்ல் மார்க்ஸ் சிந்தனைகள்’ என்ற கட்டுரையில்

‘இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காண்க: இதன் இயல்புணர்ந் தோரே'

என்ற கவிதைக்குத் தரப்படும் 'இந்த உலகம் துன்பம் நிறைந்ததுதான்! துன்பத்தை விட்டு விட்டு இன்பத்தை மட்டும் உற்றுநோக்கு!’ என்ற பழைய விளக்கத்தை மறுதலித்து விட்டு, துன்பம் நிறைந்த உலகத்தை இன்பமாக ஆக்கிக் காட்டு' என்று புதிய விளக்கத்தை அளித்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.

‘உழைப்பின் பெருமையை, சிறப்பை இறைவனே போற்றினான்’ என்று கார்ல் மார்க்ஸ் சிந்தனையோடு நமது ஆன்மிகச் சிந்தனையையும் இணைத்துக் கூறியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது. இறைவன் கொற்றாளாய் மண் சுமந்தான். அவன் பொன்மேனி புண் சுமந்தது. யாருக்குக் கூலியாளாய் இறைவன் தன்னை அமர்த்திக் கொள்கின்றான்? ஓர் ஏழை வந்திக் கிழவிக்குத் தன்னைக் கூலியாளாக அமர்த்திக் கொள்கின்றான். பெறுகின்ற கூலியோ வெறும் உதிர்ந்த பிட்டு “உழைப்புக்கு உணவு” என்ற தத்துவம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினை இறைவன் தரவில்லை. அதற்காகத் தண்டனையும் பெற்றுக் கொள்கின்றான். இது எதை நமக்குக் காட்டுகிறது? பெற்ற கூலிக்கு ஏற்ற நியாயமான உழைப்பினை யார் தர மறுத்தாலும் தண்டிக்கப் படுவார்கள். அவன் ஆண்டவனாய் இருந்தாலும் தண்டிக்கப்படுவான் என்ற அற்புதக் கருத்தைத்தான் இந்தக் திருக்கூத்து நமக்கு உணர்த்துகின்றது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் பொதுவுடைமைச் சிந்தனையே நம் ஆன்மிக உலகம் என்பதைச் சிறப்பாக, புதிய பார்வையில் கூறி இருப்பது பாராட்டுக்குரியது.

அருள்நெறித் தந்தையின் கவிதைகள்: ஞானத் தந்தைக்கு உணர்வுகள் எழும்போது எல்லாம் தமிழ்த்தாய் அவர்களின் சிந்தனையிலிருந்து எழுதுகோல் வழியே நர்த்தனம் ஆடுவாள்! கவிதை ஒரு பேசும் ஒவியம் என்பார்கள். அந்த இலக்கணத்திற்கு