பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்கிறார்கள். ஆனால் மக்களின் வறுமை. அகன்ற பாடில்லை. அறியாமை அகற்றும் கல்வியை இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே திருவள்ளுவர் உயர்த்திக் கூறினார். என்னாயிற்று? 18 உரைகள் எழுந்தனவேயன்றி எழுதப் படிக்க எல்லோரும் கற்கவில்லை; கற்பிப்பாரும் இல்லை. ஏன்? ஏன்? நாம் என்ன மூச்சு விடுவது செயலுக்காகவா? இல்லையே! உயிர் பிழைத்து வாழத்தானே மூச்சுவிடுகின்றோம்! இந்த நாட்டில் செயல் இல்லை! செயல் இல்லை! கடவுளைக் சுற்றி வருவர்; முணுமுணுப்பர், ஆனால் காரியங்களைக் கடமைகளைச் சுற்றிவாரார்! போதும் போதும், எதிர்வரும் இருபத்தோராம் நூற்றாண்டிற்குள் நமது நாட்டைப் புதுக்கியாக வேண்டும். பேச்சு மேடைகள், பட்டிமன்றங்கள் அமைப்பது போல் செயற்களப் பணிமனைகள் அமைப்போம் ! உழைப்போம்! இதுவே விவேகானந்தர் அடிச்சுவட்டில் செய்வதற்குரிய அடையாளம்.

"நீங்கள் பேசுவதில் மட்டும்தான் அறிவாளிகள். செயலைப் பொறுத்தவரையில் முட்டாள்கள்!” என்று அருளிய விவேகானந்தரின் வேதனை நிறைந்த குரலை எண்ணுங்கள்! பேச்சைக் குறையுங்கள் மூச்செல்லாம் முயற்சியாக வாழ்வோமாக!

6. நான் ஏன் சோஷலிஸ்டு?

சோஷலிஸம் - என்ற தத்துவம் மாமுனிவர் மார்க்சின் மூலதனம் என்ற நூல்வழி உலகத்திற்கு அறிமுகப்படுத்தப் பெற்றது. ஆனாலும் சோஷலிஸம் என்ற தத்துவக் கொள்கை அறிவியல் வடிவம் பெறாமல் கொள்கை வடிவில், பலநூறு ஆண்டுகளாகவே தமிழிலக்கியங்களில் இடம் பெற்றிருந்தது.

"எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே
இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லைமாதோ'