பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

219


என்று கம்பன் சோஷலிசத்தைக் கடந்த பொதுவுடைமைச் சமுதாய அமைப்பு நடைமுறையை அறிமுகப்படுத்துகின்றான். இராமன், மக்களிடம் "எதுவினை?” என்று கேட்பதன் மூலம் உழைப்பு வேலையைப் பற்றிய சிந்தனையைத் தூண்டுகின்றான். அருட்பிரகாச வள்ளலார்,

"வல்லார்க்கும் மாட்டார்க்கும் வாய்ப்பளிக்கும் வாய்ப்பே" என்று சோஷலிச தத்துவத்தை இலக்கண வடிவிலேயே அறிமுகப்படுத்துகின்றார். ஆயினும் வள்ளலாரின் பாடல் மிகுதியும் சமயத் துறையைச் சார்ந்தவர்களாலேயே பாடப்பெற்று வந்ததால் சோஷலிசச் சிந்தனை செயல் வடிவம் பெறவில்லை; புரட்சி தோன்றவில்லை. பக்திப்புனலில் வள்ளலாரின் புரட்சித் தீ அணைந்து விட்டது. இலக்கியச் சுவையில் கம்பனின் அரசியல் சிந்தனை அவியலாகி விட்டது.

எது சோஷலிசம்? சோஷலிசத்தைப் பற்றிய கருத்தில் கூடக் குழப்பம்! ஆம்! சோஷலிசமே சோறுபோடும்; துணி கொடுக்கும் என்று சொல்கின்றனர். இல்லை, இல்லை! சோஷலிசம் சோறு போடாது; சோறுபோடக் கூடாது. சோஷலிசம் மனிதனை மனிதனாக்கும்; அறிவுடையவனாக்கும்; திறன்மிக்க தொழிலாளனாக்கும், படைப்பாளியாக்கும். அவ்வழி அவன் சோறு தேடிக் கொள்வான்.

உழைப்புக்கு வாய்ப்பு! எல்லாருக்கும் ஆற்றலுக்கேற்ற வேலை வாய்ப்பு! வேலைக்கேற்ற கூலி! உழைப்புக்கேற்ற கூலி! இதுவே சோஷலிசம்.

சோஷலிசம் என்ற சொல்லுக்கு நல்ல தமிழாக்கம் "வாய்ப்பு' என்ற சொல்லாகும். வாய்ப்புக்கள் எல்லாருக்கும் பொது.சாதி, மதம், கட்சி பாராமல் எல்லாருக்கும் வேலை! எல்லாரும் உழைத்தலுக்கு ஏற்ற வாய்ப்பு. இது சமுதாய வளர்ச்சியின் - முன்னேற்றத்தின் முதற்படி உழைப்பதன் மூலமே எல்லாரும் எல்லா நலன்களும் எய்தல் வேண்டும்.