பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று ஊழியர்கள் நம்பினர். குறிப்பாக தீண்டாமை ஒழிப்பு வேலையில் நம்முடைய இயக்கம் செய்துள்ள வேலைகள் மிகச் சிறப்புடையன. நம்முடைய இயக்கத்து ஊழியர்கள் சேரி சேரியாகச் சென்று அவர்களிடையே செளஜன்யமாகப் பழகி சேரிகளில் கூட்டுப் பிரார்த்தனை இயக்கங்களை நடத்தினர். அவர்களுடனேயே உடனிருந்து உண்டு சமத்துவத்தை நடைமுறையில் காட்டினர். சிவன்ராத்திரி, வைகுண்ட ஏகாதசி முதலிய சமய, திருநாட்களிலும், சுதந்திர தினம், குடியரசு தினம் முதலிய அரசியல் திருநாட்களிலும் ஊழியர்கள் சாலைகள் அமைத்தல், தண்ணிர் வரும் கால் வாய்களை வெட்டுதல் முதலிய சமுதாயத்திற்குப் பயன்படும் திருத் தொண்டுகளைச் செய்தனர் என்பது நினைவுறத் தக்கது. தமிழ் நாட்டில் வீசிய கொடும் புயலால் பாதிக்கப் பட்ட பிராந்தியத்து மக்களுக்கு தலைவர்களும் ஊழியர்களும் சென்று அறிவுரைகள் சொல்லி ஆறுதல் கூறி உணவுக்கு அரிசியும் உடைகளும் வழங்கினார்கள். அண்மையில் நடந்த முதுகுளத்துர் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்களுக்குச் சென்று சமாதான செய்தி தரும் தூது கோஷ்டியினராக இருபது ஊழியர்கள் கால்நடையாகவே சென்று ஆறுதல் கூறி சமாதான திருத்தொண்டு செய்தனர். பொதுவாக எந்தவிதமான சமுதாயத் தொண்டு என்றாலும் நம்முடைய இயக்கத்தினர்கள் முன்னின்று முழு மூச்சுடன் செய்வார்கள். அப்படிச் செய்வதிலே அவர்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. விரிக்கிற் பெருகும் என்று அஞ்சி இந்த அளவில் நிறுத்திக் கொள்கிறோம். -

திருப்பணி மன்றத்தின் தோற்றம்

பிரசார் முறைகளிலும் சமுதாய திருத்தொண்டுகளிலும் வெற்றி நடைபோட்ட இயக்கம் ஆழமான நிர்மாண வேலைகளைச் செய்து சமுதாயத்திற்கும் சமயத்திற்கும்