பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விதையைத் தந்து, நம் கையில் மண்வெட்டியையும் தந்து - நம்மை உலவவிட்டிருப்பதே நாம் சோம்பேறியாக இராமல் உழைத்து வாழவேண்டும் என்பதற்குத்தான்.

சில ஊர்களில் சிவன் கோயில் பாழடைந்து கிடப்பதைக் கண்டு மிகவும் வருந்துகிறேன். இந்து மதத்தையே புனர் நிர்மாணம் செய்ய வந்தவர்களாக கருதப் பெறுபவர்களின் கண்களில் பட்டும்கூட இந்தக் கோயில் மீதுள்ள காட்டை வெட்டி எடுப்பதில் கவனம் செலுத்தப் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியதுதான். இப்படிப் பல்வேறிடங்களிலும் சிற்றுார்களில் நமது கோயில்கள் பல இடிந்து பாழடைந்து கிடக்கின்றன.

கோயில்கள் சமுதாயத்தின் பொதுச் சொத்து. இளைஞர்களுக்கு இளமையும், செயலார்வமும், அக்கறையும் இருந்தால் இப்படிப் பாழ்பட்டுக் கிடக்கின்ற கோயில்களைப் புதுப்பிக்க முன்வாருங்கள்! கோயில் இருந்து குடிமக்கள் இருந்தால்தான் சிறப்பு.

அன்று மூவேந்தர் காலத்திலும் நாட்டு மக்கள் எல்லோருக்கும் கல்வி பெறும் உரிமை இருந்ததாக இல்லை. எனவேதான் நம்மிடையே பரவலான அறிவுப் புரட்சியும் கருத்துப் புரட்சியும் ஏற்படவில்லை, பின், உயர்ந்த சாதிக் காரர்கள் என்போருக்கும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த வசதி படைத்தவர்களுக்குமே கல்வியுரிமை இருந்தது. இன்று நமது ஆட்சியில் அந்நிலை முழுக்க முழுக்க மாறி எல்லோரும் கல்வி பெறுவதற்கான வசதியும், வாய்ப்பும், உரிமையும் வழங்கப் பெற்றிருக்கிறது.

மனிதனின் இன்றியமையாத் தேவைகளை அரசாங்கமோ, சமுதாயமோ கொடுத்தாக வேண்டும். இறைவன் காற்றைப் படைத்து அளித்தார்; கவின்மிகும் மணமலரைப் படைத்தளித்தார்-கதிரவனின் ஒளியைப் படைத்தளித்தார். இவற்றை யாரும் வேலிபோட்டு மறைத்து