பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் என்பதை அறிந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு அதிப்படியான பொறுப்பு இருக்கிறது. இன்றைய ஆசிரியர்களில் பெரும்பாலோருக்கு அது இல்லை. ஆசிரியர்கள் அறிவு வளர்ச்சிக்கான நல்ல-பயனுள்ள புத்தகங்களையே படிக்க வேண்டும். இன்றைக்கு ஆசிரியர்கள் கூட வெறும் பொழுது போக்குக் கதைகளையே படிக்கிறார்கள்.

இன்று வீண் பொழுது போக்குவதற்கு நமக்கு நேரமில்லை. இந்த நாட்டின் கடைசி ஏழைமகன் சோறும் துணியும் பெற்று வாழுகிறவரை சற்று அதிகமாகவே உழைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது. அப்படியிருக்க, நாம் வீண் பொழுது போக்குவது கொடுமையினும் கொடுமை.

'தன்பெண்டு தன்பிள்ளை சம்பாத்தியம் இவையுண்டு தானும் உண்டு' என்று கருதுகிற உள்ளம் கடுகு உள்ளம்; அது தன்னல உள்ளம். தெரு மக்கள் - ஊர் மக்களின் வாழ்க்கை நலனில் அக்கறை கொள்ளுகிற உள்ளம் துவரை உள்ளம்; அது பொதுநல உள்ளம். சாம்பாரில் கடுகு அதிகமாகப் போனால் சாம்பார் கசக்க ஆரம்பித்துவிடும். சாம்பாரில் பருப்பு அதிகரித்தால் சாம்பாருக்கு சுவை அதிகரிக்கும். எனவே தன்னலம் பெருகுவது கடுகு அதிகரிப்பது போல; பொதுநலம் பெருகுவது பருப்பு அதிகரிப்பது போல.

மற்றவர்களின் பேச்சுக்கும் கருத்துக்கும் நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும்; மற்றவர்கள் பேசுவதைக் கேட்கத்தான் நமக்குக் காது கொடுக்கப்பட்டிருக்கிறது. காதுக்குக் கீழேதான் வாய் இருக்கிறது. எனவே, முதலில் மற்றவர்கள் கருத்துக்கு மதிப்புக் கொடுத்துக் கேட்டு, அதன் பிறகுதான் நாம் பதில் சொல்ல வேண்டும் அப்படி நாம் மதிப்புக் கொடுப்பதுதான் ஜனநாயகம்.