பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்ளுங்கள்; இதைச் செய்து கொள்ளுங்கள்' என்பார்கள். ஆனால், அவன் தன்னுடைய உயிரையே கொடுத்துவிட்டான். அந்த அரசனுக்கு உயிர், நீதியிலே இருந்தது.

அவனுடைய மனைவி, அரண்மனையில், அத்தாணி மண்டபத்தில் பாண்டியனுக்குப் பக்கத்திலே இருந்தான். இவன் சுருண்டு கீழே விழுந்தவுடன், அவன் உயிர் பிரிந்தவுடனே, அவளும் கீழே விழுந்து இறந்து போனாள். அதிலே, யார் உயிர் முன்னே பிரிந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு உயிர் பிரிந்தது என்று சொல்லுவார்கள். அது யார்? பாண்டிமாதேவி! பாண்டிய மன்னனுடைய மனைவி, கணவன் உயிர் பிரிவதற்கு முன்பாகவே, அவனுடைய உயிர் எங்கு செல்கிறது என்று தேடிச் செல்வாள் போல், உயிர் பிரிந்தது. அந்த அரசிக்கு உயிர் எங்கே இருந்தது? கணவன் பால் கொண்ட அன்பிலே, கற்பிலே உயிர் இருந்தது. இவைகளெல்லாம் உயிர் இருந்த இடங்கள். பாண்டியன் அரசவையிலே உயிரை வைத்திருந்தான். பாண்டியமாதேவி, கணவன் மாட்டுள்ள அன்பிலே, பற்றிலே உயிர் வைத்திருந்தாள்.

இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, நமக்கு உயிர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். நமக்கு உயிர் எங்கே இருக்கிறது என்றால், எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று இழுக்கிறோம். திருவள்ளுவர் சொல்கிறார். "அன்பு காட்டுகிற பழக்கத்திலே, வழக்கத்திலே உயிரை வைத்துக்கொள். அன்பு காட்டுவதற்காகவே வாழு! உனக்கு அன்பு காட்ட முடியாமல் இடர்ப்பாடுகள் ஏற்படுகிறது என்றால், உயிரைத் துறக்கத் தயாராக இரு" அப்படிப்பட்ட சமயம் நம்முடைய சமயம்.

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்" அன்பு வேறு; கடவுள் வேறல்ல. அன்பே தான் கடவுள் என்று நம்முடைய நாட்டுச் சமயம் சொல்கிறது. எனவே, அன்புச்