பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பழைய காலத்திலே ஓர் அரசன் இருந்தான். அவன் வேட்டைக்குப் போனான். வேட்டைக்குப் போன பொழுது, அந்த மலையிலே, காட்டிலே ஒரு நல்ல முல்லைக் கொடி படர்ந்து இருந்தது. அது படர்ந்து பூக்கிறகாலம். அந்தக் கொடி படர்வதற்கு ஒரு கொம்பு இல்லாமல் தவித்தது. நன்றாகக் கொடி படர்ந்து நிற்கிறது. அது படர்வதற்கு ஒரு கொழு கொம்பு இல்லாமல் அரும்புகள் கட்டி, அது தத்தளித்துத் தவித்துக் கொண்டிருந்தது. அந்தக் கொடியிலே அரும்புகளும் சேர்த்துச் சுற்றியிருந்ததாலே அது வாய் திறந்து "எனக்கு ஒரு கொழுகொம்பு கொடுப்பார் இல்லையா” என்று கேட்டது போல இருந்ததாம். ஏனென்றால், முல்லை அரும்புகள் வெள்ளையாகத்தான் இருக்கும். ஆக, வரிசையாக முல்லை யரும்புகள் சுற்றியிருக்கின்றன. கொடி படரத் தவிக்கிறது. ஆகவே, அரசன் பார்க்கிறான். அரசன் பார்த்தவுடனே, உயிர் இரக்கத்தில் வெளிப்பட்டுத் தான் ஊர்ந்து வந்த தேரிலிருந்து இறங்கி, அந்தத் தேரையே அந்தக் கொடிக்குப் பக்கத்தில் நிறுத்தி, அந்தக் கொடியைத் தேரிலே படரவிட்டு வந்து விட்டான். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பாரி என்ற ஒரு அரசன் இருந்தான். அவன் முல்லைக்குத் தேர் கொடுத்தவன். அவ்வளவு செடி கொடிக்கும் கூட உயிர் உண்டு என்று உணர்ந்தது நம் நாடு, செடி, கொடிக்கு உயிர் உண்டு என்று கண்டுபிடித்தது யார் என்றால், உடனே சர் 'ஜகதீஸ் சந்திரபோஸ்' என்று சொல்வார்கள். ஆனால், பழைய காலத்திலேயே செடி, கொடிகளுக்கு உயிர் உண்டு என்று கண்டுபிடித்தது நம்முடைய சமயம்; இலக்கணம்; நம்முடைய மரபு.

எனவே, வாழை, தார் ஈன்று, அது இனிமேல் உயிர்ப்பாக வாழ வேண்டிய அவசியமில்லை என்றால் தான் வெட்டலாமே தவிர, நாம் குருத்துக் கன்றுகளையும், தார் ஈன்று அதனுடைய வாழ்க்கை முடியாத வாழை மரங்களையும் வெட்டிக் கட்டுவது என்பது ஒரு நல்ல