பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆனால், ஆற்றல் இல்லாதவர்களாக இருப்பார்கள். சிலருக்கு அன்பு இருக்கும். ஆனால் அன்பை நெறிப்படுத்தி பயன்படுத்தத் தெரியாமல் இருப்பார்கள். நன்கு அன்புடன் இருப்பார்கள். ஆனால், அவர்களால் ஒரு பயனும் இருக்காது. காரணம், அவர்களுடைய அன்பைச் செயல்படுத்துகிற ஆற்றல் இல்லை. சிலருக்கு நல்ல அறிவு இருக்கும். ஆனால், அவர்களால், அறிவை செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. நன்கு நிறையப் படித்திருப்பார்கள். நல்ல ஞானம் இருக்கும் ஆனால் செயல்பாடு இருக்காது. எவ்வளவு உயர்ந்த தத்துவமானாலும் அதற்குச் செயல் உருவம் வேண்டும். சிலருக்கு ஒழுக்கம் இருக்கும். அது கூட ஆற்றலாக மாறாது. கண்ணகிக்கு என்ன சிறப்பு? பூம்புகாரிலே அவள் கற்புடையவள் தான். தெய்வத்தைக் கூட வணங்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். நோன்பு நோற்றாள். ஆனால், அங்கே அவளுடைய கற்பு ஆற்றலாக உருவாக்கப்படவில்லை. கனவாகக் கடந்து கொண்டிருந்தது. ஆனால், பாண்டிய நாட்டிற்குச் சென்றவுடன் மதுரையில் அந்தக் கற்பு ஆற்றலாக உருவாக்கப்படுகிறது. ஓர் அரசையே அறைகூவல் கேட்குமளவிற்கு, ஒரு நாட்டையே எரிக்கிற அளவிற்கு அவளுக்கு ஆற்றல் பிறந்திருக்கிறது என்று சொன்னால், கற்பு ஆற்றலாக உருவாக்கப் பட்டிருக்கிறது. மாதவியினுடைய கற்பு ஆற்றலாக உருப்பெறவில்லை; பாண்டியமாதேவியின் கற்பு ஆற்றலாக உருப்பெறவில்லை. எனவே, கற்பானாலும் சரி ஒழுக்கமானாலும் சரி, அறிவானாலும் சரி, அன்பானாலும் சரி, அது ஆற்றலாக உருப்பெற வேண்டும். ஆற்றல் என்பதுதான் ஆதாரம்; சக்தி அதைப் பாரதி சொல்லுவான், எல்லாவற்றிற்கும் ஆதாரம் சக்திதான் என்று.

ஆக நம்பிக்கை என்பது வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நாளைய வாழ்க்கை நிச்சயமாக நம்முடையது என்று நம்புங்கள். நாளை நிச்சயமாக நாம் எடுத்த காரியம் நடைபெறும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். தேர்வில்