பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3
பொதுவியல் கட்டுரைகள்

1. தமிழ்

இன்றைய உலக வரலாற்றில் மொழி இன்றியமையாத ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது. நம்முடைய நாட்டில் பலர் மொழியைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்ளாமல், மொழியைப் பற்றிப் பேசுவது, எண்ணுவது, மொழி உரிமையைக் கேட்பது குற்றம் என்று கருதுகிற காலத்தில் நாம் வாழ்கிறோம்! இந்தத் தலைமுறையில் தமிழர்களாகிய நமக்குச் சில இன்றியமையாத கடமைகள் இருக்கின்றன என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் ஒடுகிறான்; நடக்கிறான்; உழைக்கிறான்; முயற்சி செய்கிறான். இதற்கு அவனுக்கு இரண்டு கால்கள் அவசியமாகத் தேவை. நல்ல மாளிகைக் கட்டி சுவர்கள் எழுப்பி அதற்கு முன்னே பெரிய பூங்கா என்று பெயரிட்டிருக்கிறார்கள். அந்தப் பூங்கா பூங்காவாக இருக்க வேண்டுமென்றால், அங்கே செடிகள் தேவை. உயர்ந்த மலர்ச் செடிகளாயினும் அதற்கு வேலி தேவை. அது போலவே, மாபெரும் கோபுர அமைப்புடைய கோயிலாயினும் அங்கு மூர்த்தி இருந்தால்தான் சிறப்பு. பூங்காவிற்கு வேலியும், ஆலயத்திற்கு மூர்த்தியும் எப்படி இன்றியமையாதவையோ அதுபோல மனித சமுதாயத்திற்கு மொழி இன்றியமையாத ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.