பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

287


நாடு, நம்முடைய மொழி, நம்முடைய இனம் என்ற கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இலக்கியப் பயிற்சி வேண்டும். ஊர்தோறும் நூலகங்கள் பெருகவேண்டும். தமிழனிடம் கேட்டால் என்னுடைய நூல், வாழ்க்கை முறை திருக்குறள் என்று சொல்லவேண்டும். என்னுடைய மொழி இன்னது என்னுடைய சமயம் இன்னது என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட பயிற்சி கொடுக்கவேண்டும்.

தமிழ்த் தாய்க்குத் திருக்குறளும், இளங்கோ அடிகளின் நெஞ்சையள்ளும் சிலம்பும், தொல்காப்பியரின் ஒல்காப்பெரும் புகழ் தொல்காப்பியமும், குண்டலகேசியும், மணி மேகலையும் போன்ற பல பழம்பெரும் அணிகளை அணிவித்து நாம் மகிழ்ச்சியில் திளைக்கின்றோம்.

தமிழ் அன்னை அணிந்துள்ள அணிகள் யாவும் பெருஞ் சிறப்புடையனவே. ஆனாலும் இவைகளை எல்லாம் இந்த நூற்றாண்டில் செய்திருக்கிறோமா? இப்படிக் கேட்பதைவிட ஒரு சிறு உதாரணம் சொல்லுகின்றேன்.

ஒரு தாய் இருக்கிறாள். வயது மூத்த தாய். அந்தத் தாயின் அருமை மகன் அரசியல் அலுவலகத்திலிருக்கிறார். ஒரு நாள் அந்த மகனிடத்தில் அந்தத் தாய் கேட்கிறாள். "தம்பி! நீ வளர்ந்துவிட்டாய். கை நிறைய சம்பாதிக்கிறாய். ஆனாலும், நான் போட்டுக் கொண்டிருக்கிற நகைகள் எல்லாம் உன் அப்பா போட்டதுதானே? நீ ஒன்றும் செய்து போடவில்லையே” என்று கேட்கிறாள்.

இன்று தமிழ்த்தாய் போட்டிருக்கிற அணிகளைப் பார்த்தால் பழைய சிலப்பதிகாரம், பழைய குண்டல கேசி, பழைய குறள், பழைய மணிமேகலையாக இருக்கின்றன. இதைப் பார்த்து தமிழ்த்தாய் இன்றைக்கு, தமிழ் மக்களே, நான் இன்று அணிந்துள்ள அணிகள் யாவும் உங்கள் அப்பன், பாட்டன்,