பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

293


பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின் தமிழ்நாட்டில் எவ்வித ஞான வளர்ச்சியும் இல்லாமல் போலிப் புலமையும், வரட்டு ஜம்பமுமே தலை தூக்கி நின்றன. இந்தச் சீர்கேடான நிலை நீங்க ஒரு மறுமலர்ச்சி தேவைப்பட்டது. இம் மறுமலர்ச்சி 150 ஆண்டுகட்கு முன் நமது நாட்டில் அடி எடுத்து வைத்த ஆங்கிலேயர்களால் தோன்றிற்று என்று சொன்னால் மிகையாகாது. ஆங்கிலேய அதிகார வர்க்கத்துடன் கையில் விவிலிய நூலுடன் பல பாதிரிமார்களும் வந்தார்கள். அவர்கள் தமிழ் மக்களிடையே, விவிலிய நூல்களின் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தமிழில் மொழி பெயர்த்தார்கள். இக்காலத்திலேயே இராமாயண, பாரத வசனங்கள் எழுந்தன. இக்காலத்திலிருந்த யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்கள், தமிழில் எளிமையும், நயமும், பொருள் வளமும் சிறந்த அநேக வசனநூல்கள் எழுதினார்கள். நாளடைவில் ஒரு புல்லுருவி தோன்றிற்று. அதுதான் பிறமொழிச் சொற்கள் வசனத்தில் விரவி வந்தமையாகும.

இன்று தனித் தமிழைப் பரப்புகிற பத்திரிகைகள் ஒன்றிரண்டுதான் நாட்டில் உள்ளன. பெரும்பாலான பத்திரிகைகள் கலப்பு மொழியிலேயே வெளிவருகின்றன. வழக்கிலும் கூடப் பிறமொழிச் சொற்கள் மிக அதிகமாகப் பெருகிவிட்டன. இச்செயலால் "தமிழுக்கு எப்பொழுதும் தனித்து இயங்கும் ஆற்றல் உண்டு" என்று கால்டுவெல் போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் சொன்ன தன்மையை இழக்கும்படி நேரிடலாம். தனித் தமிழ் நடையை நாட்டிலே வளர்க்கப் பாடுபடுகின்ற "தமிழ் நாடு” போன்ற இதழ்கள் தமிழ் மக்களுடைய முழு ஆதரவைப் பெறவேண்டும். எனவே, இனி நாம் நமது முன்னோர்களைப் போலவே தமிழை வளர்க்கவேண்டும். நமது முன்னோர்களின் தமிழ் அன்பு மிக மிகச் சிறந்தது என்பதை நினைவூட்டிக் கொண்டால் நமக்கும் உணர்ச்சி பிறக்கலாம்.