பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


3. தமிழிசை


இசையின் பெருமை

இசை இன்பம் தருவது. ஒருங்கே பொறி புலன்களுக்கு இன்பந் தருகின்ற பெருமை இசைக்குண்டு. "இசை” என்னுஞ் சொல்லுக்கு "வயப்படுத்துவது" "இசைவிப்பது” என்பது பொருள். மரஞ் செடி கொடிகள் முதலிய ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு படைத்த மக்கள் வரையில் எல்லா உயிர்களையும் வசப்படுத்துகின்ற ஆற்றல் இசைக்குண்டு. உயிரற்ற கல், மண், நீர், காற்று முதலிய சடப் பொருள்களையும் பாடுகின்றவர்களின் எண்ணத்தோடு இசைத்து இயங்கச் செய்கின்ற ஆற்றல் இசைக்குண்டு. உணர்ச்சியற்றவர்களுக்கும் உணர்ச்சியை ஊட்டுகின்ற பேராற்றல் இசைக்குண்டு; கன்னெஞ்சையும் கசியச் செய்கின்ற திறன் இசைக்குண்டு; நல்லுணர்வை நல்குகின்ற திறன் இசைக்குண்டு; குழைந்த உள்ளத்தைத் தருகின்ற திறனும் இசைக்குண்டு.

தமிழகமும் இசையும்

தமிழ் மக்களது வாழ்க்கையிலே இசை ஒன்றியிருந்தது. இருக்கிறது. தமிழ் வளர்த்த சங்கங்களிலே இசை பயிலுகின்ற இடம் தனியே இருந்தது. அத்தகைய இடத்தை "இசைச் சூழல்” என்று குறிக்கின்றார் வாதவூரடிகள். தமிழே "முத்தமிழ்" என்றுதான் பேசப்பெறுகின்றது. தமிழ்ச் சமுதாயத்தில் குழந்தைப் பருவமுதல் இறுதிக்காலம் ஈறாக இசை தோய்ந்திருக்கின்றது. பிள்ளைப் பருவத்தில் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியூட்டி உறங்க வைக்க "ஊசற் பாட்டுக்கள்” பாடப் பெற்றன; அப் பாட்டுக்கள் ஊசல்வரி என்று சங்க இலக்கியங்களில் பேசப் பெற்றுள்ளன. இன்னும் விளையாடுங் காலத்தில் பாடுகின்ற பாட்டுக்கள் "கந்துகவரி" முதலியன. "மங்கல வாழ்த்துப் பாடல்”, “செருப்பறை"