பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

295


"வள்ளைப் பாட்டு" முதலிய பாவினங்களும் சங்க காலத்தில் பயின்றன. இவையல்லாமல் ஆறுகள், கடற் கரைகள் முதலியவற்றின் இயற்கையின் எழிலின்பத்தில் ஈடுபட்டுப் பாடிய பாடல்கள் "ஆற்றுவரி”, “கானல்வரி” முதலியனவாம். தெய்வத்தைப் பரவும் பாட்டுக்கள் “தேவபாணி” எனப்படும். சங்க நூல்களில் "பரிபாடல்” என்பதும் ஒன்று. அது முற்றும் இசைப் பாட்டினாலேயே ஆனது. "பரிபாட்டு” என்பது ஒருவகையான இசைப் பாட்டுக்குப் பெயர். இவ்வாறு பண்டைத் தமிழ் மக்கள் எந்நிலையிலும் இசைப்பாடல்களில் மனந்தோய்ந்து மகிழ்ந்திருக்கிறார்கள். தற்பொழுதும் தமிழ் நாட்டிலே எந்தத் தொழிலிலும் இசையைப் பயன்படுத்திக் களைப்புத் தெரியாத நிலையில் வேலையை முடிக்கின்றனர். அவை "ஏற்றப் பாட்டு, உழவுப்பாட்டு" முதலியனவாம்.

"பாடலோர்த்தும் நாடகம் நயந்தும்" என்று 'பட்டினப் பாலை'யில் வருகின்ற தொடர் பண்டைத் தமிழ் மக்களது வாழ்க்கையில் இசை தோய்ந்திருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். தமிழ்மொழி முத்தமிழாகவே இயங்கிற்று என்பதை முதலில் சொன்னோம். தமிழிலக்கண ஆசிரியர் அகத்திய முனிவர் முத்தமிழுக்கும் இலக்கணம் செய்தார். சிகண்டியார் என்னும் புலவர் "இசை நுணுக்கம்” என்று ஒரு இசைத் தமிழ் நூல் செய்தார். இளங்கோவடிகள் முத்தமிழ்க் காப்பியமாகச் சிலப்பதிகாரத்தைச் செய்தார். "பழுதற்ற முத் தமிழ்ப் பாடல்” என்று அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரத்தைப் புகழ்கின்றார். அடியார்க்கு நல்லாரும் இசைத் தமிழின் இயல்புகளை நன்கு அறிந்தவர். இங்ஙணமெல்லாம் இசைநலம் பண்டைக் காலத்தில் மிகவும் சிறந்திருந்ததென்றே தெரிகின்றது. கண்ணகனார், கண்ணனாகனார், கேசவனார், நன்னாகனார், நல்லச்சுதனார், நாகனார், பித்தாமத்தர், பெட்டகனார் முதலிய பெருமக்கள் பலரும் இசைத் தமிழ்ச் செல்வார்களாக விளங்கினர்; இவர்களெல்லாம் பரிபாடலுக்கு இசை வகுத்தவர்களாவர்.