பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழிசையின் அவசியம்

இசை உயிர்,பாடல் உடல் உயிரின்றி உடல் இயங்காது; உடல் இன்றேல் உயிருக்கும் இயக்கம் இல்லை, பயனுமில்லை. எனவே, பாடுகின்ற பாடல்களின் பொருளை உணர்கின்ற நிலை வருகிற பொழுதே இசைக் கலையின் பயனை அனுபவிக்கச் சாதாரண மக்களிலிருந்து பெரியவர்கள்வரை முடியும். மேலும் வாழ்க்கையை வளப்படுத்தத்தானே கலைகள்? வெறும் இசை, கேட்கச் சிறிது நேரம் இன்பமாக இருக்குமே யொழிய வளம் பயப்பதில்லை. நல்ல கருத்துள்ள பாடல்களை இசையுடன் பாடுகின்ற பொழுது, கேட்பதனால் நல்ல உணர்ச்சியையும், மெய்ப்பாட்டையும் அடைய முடிகிறது; உண்மை இன்பத்தையும் அனுபவிக்க இயலுகிறது. எனவே, தமிழிசைதான் இந்த நாட்டிற்குத் தேவையென்று நிச்சயமாக நம்புகிறோம். இந்த நம்பிக்கை வேற்று மொழியின்கண் உள்ள வெறுப்பினால் அல்ல என்பதையும் உணர்த்த ஆசைப்படுகின்றோம்.

சமயமும் இசையும்

தமிழ் மக்கள் சமயத்துறையில் இசையைப் பெரிதும் போற்றினர்; இறைவனையே ஏழிசையாகவும், இசையின் பயனாகவும் கண்டு வழிபட்டனர். ஆண்டவனை அகங்குளிர்ந்த உள்ளத்துடன் இசையொன்றப் பாடுகின்ற பண்பு தமிழ் மக்களுக்கே உரியது. ஆண்டவன் தமிழோடு இசை கேட்கின்ற பெரு விருப்பினனாக விளங்குகின்றான் என்றே அவர்கள் உணர்ந்து ஓதினர். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலிய சமயப் பெருமக்கள் இசை கலந்த பாடல்களைப் பாடிப் பரமனை மகிழ்வித்ததோடு மக்களிடையேயும் பக்தி உணர்ச்சியைப் பரப்பினர். இசையின்கண் எழுந்த வேட்கையினால் மதுரை ஆலவாயண்ணல் யாழ்ப்பாணருக்குத் திருமுகங் கொடுத்தார். அறுபான்மும்மை நாயன்மார்களுள் ஒருவராகிய ஆனாய நாயனார் ஏழிசையைக் குழலில் ஊதிப்