பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

297


பேரின்பப் பெருநிலை பெற்றார். இசையினால் இறைவனை ஏத்துதலாற் பெறும் பயனை "அளப்பில கீதஞ் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே" என்று அநுபூதிச் செல்வர் சொல்லுகின்றார். பிற்காலத்தில் தமிழிசை சமயத்தின் அரவணைப்பிலேயே வளர்ந்தது; இன்றும் தமிழிசை நிலவுவது இசைநலத்தோடு அமைந்த தேவாரப் பதிகங்களால்தான்.

பண்ணிசை

முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்திலே இசைக் கருவிகளைப்பற்றிப் பேசுகின்ற பொழுது "மிடற்றுப் பாடல்” என்று ஒன்று குறிக்கின்றார். இது வாய்ப்பாட்டைக் குறிக்கும். இங்ஙனம் இசைக் கருவிகளோடு "மிடற்றையும்" சேர்த்துச் சொன்ன பெருமை தமிழருக்கே உரியது. "மிடற்றுப் பாடல்” என்பதற்குச் சிலப்பதிகார அரும்பதவுரை யாசிரியர், "மூலா தாரந் தொடங்கிய மூச்சைக் காலாற் கிளப்பிக் கருத்தால் இயக்கி ஒன்றெனத் தாக்கி இரண்டெனப் பகுத்து பண்ணிர்மைகளைப் பிறப்பிக்கப்பட்ட பாடலியலுக்கு அமைந்த மிடற்றுப் பாடல்” என்று விளக்குகின்றார். ஓசையோடு இசைந்து செல்லுங் கருத்தின் இயக்கம் இதில் நினைவாய் எடுத்துக் காட்டப் பெறுகின்றது. முதலில் எழுந்த ஓசை, பின் இசையும் பண்ணும் என்று இரண்டு வகையாக இசைக்கப்படுவதனால் இவ்வுரையில் இரண்டெனப் பகுத்துக் கூறினார். இசை பண் உருவங்கொள்ளும்போது "பண்கள்" எனவும், "திறங்கள்” எனவும் பாகுபாடு கொள்ளப்படும். அவற்றுள் ஏழு நரம்புகளும் நிறைந்தது பண்; அதற்குக் குறைந்த நரம்புகள் அமைந்தது திறம். திறங்கள் பண்களுக்கு இனமானவை. ஒளியில் ஏழுவகையான நிறங்களிலிருந்து இயங்குதல்போல ஒலிகளும் ஏழுவகைகளாக இயங்கி வெளியிற் காரியங்களை நிறைவேற்றுகின்றன. அவ்வேழு வகை ஒலிப்பிரிவுகளே இங்கு ஏழு நரம்புகள் எனப்பட்டன. திலங்களுக்கும், காலங்களுக்கும் எனப் பண்களை முறைப் கு. XV. 20