பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

303


இலக்கியம் மனித குலத்தின் ஊற்றுக்கண் போன்றது. அதற்கு ஏற்ப அரசியல் உருவாகின்றது. வள்ளுவம் ஒப்பற்ற உலகப் பேரிலக்கியம் என்கிறோம். தமிழ் நாட்டில் உள்ள மூன்றரைக் கோடித் தமிழர்களில் எத்தனை பேருக்குத் திருக்குறள் தெரியும்? எனக்கும் உலகுக்கும் இன்றைக்கு இருக்கும் தொடர்பு போல அன்றைக்கு வள்ளுவருக்கும் உலகுக்கும் தொடர்பில்லை. இன்று உலகம் என்னை நெருங்கி விட்டது. பழைய காலத்தில் ஆத்திரப்பட்டால், பகைமை கொண்டால் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள ஈட்டி மட்டுமே அவர்கள் கையில் இருந்தது. ஈட்டி எட்டின மட்டுமே குத்தும். ஈட்டிக்கு எட்டாமற் போனால் ஆபத்தில்லை; அதன் பிறகு சில அடி தொலையில் இருப்பவனைச் சுட்டொழிக்கத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. அது சற்றுத் தொலைவில் இருந்தவனையும் சுட்டது. இன்றோ, அணுகுண்டுக் காலம். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கின்றவர்களையும் ஏவுகணைகளின் மூலம் அழித்துவிடக் கூடிய கொடுமையான கருவிகள் கையில் உள்ள காலம். அதனால் அன்றைய மனிதனின் ஆத்திரத்திற்கும் ஆபத்திற்கும் இடையே இடைவெளி இருந்தது. இன்றோ ஆத்திரத்தின் நிழலாகவே ஆபத்து இருக்கிறது. இந்த உண்மையை இலக்கியக் கர்த்தாக்கள் நன்றாக உணர வேண்டும். இன்றைய மக்கட் சமுதாயத்திற்குத் தேவையானதை அவர்கள் உருவாக்கித் தரவேண்டும். கிணற்றில் ஊறுகின்ற தண்ணீரை வெளிக் கொணர்ந்து அதைப் பலரும் உண்ணத் தருவதுதான் இலக்கியம்; கிணற்றிலே தண்ணீரைக் கொண்டுபோய் ஊற்றுவதல்ல.

வறுமை மிகவும் கொடுமையானதுதான். ஆனால் வறுமைக்கு மருந்து பணம் என்று பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கருத்துச் சரியானதல்ல. உழைப்பும் உழைப்புக்கு அடிப்படையான முயற்சியும்தான் வறுமையைப் போக்கும் அருமருந்து, இலக்கியக் கர்த்தாக்கள்