பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

311


வள்ளன்மைக்கு உவமை சொல்ல உலகில் யாரும் எந்தச் செயலும் ஏற்றதாய்த் தோன்றவில்லை. அவர் பரமனை எண்ணுகின்றார். இவ்வுலகில் எத்தனையோ நறுமண மலர்கள் உண்டு. அப்படியிருக்க சூடத்தகாத மலரும், நல்லனவென்றும் தீயனவென்றும் இரண்டிலும் வைத்தெண்ணப்படாததுமான எருக்கம் பூவை இறைவன் சூடினான். எருக்கம் பூவாயினும் ஒருவன் நெஞ்சந் தோய்ந்த அன்புணர்ச்சியுடன் கொடுப்பானாயின் கடவுள் அதை ஏற்றுக்கொள்கிறார். இறைவனுக்குகந்த எண்வகை மலர்களில் எருக்கம் பூவும் ஒன்று "விரைசார்ந் தழியாத புல்லெருக்கஞ் சூடிக்கொண்டாய்” என்று வாட்போக்கிக் கலம்பகம் பேசும். பரமனுடைய இந்தப் பண்பைப் பாரியினுடைய வள்ளன்மைக்கு உவமையாகக் காட்டுகின்றார் பொய்யா நாவிற் கபிலர். அறிவில்லாதவர்களும், புல்லிய குணமுடையாரும் பாரியை நம்பி, மதித்து அவனிடம், பொருள் பெறவேண்டுமென்ற ஆசையோடு சென்றால் பொருளைப் பெற்று இன்பவாழ்வு நடத்தலாம். அதுபோலவே, மக்கள் இறைவனிடத்து நம்பிக்கைகொண்டு, பொய்ம்மையாயவெல்லாம். போக்கிப் பேரருள் செய்வான் என்று உறுதியான எண்ணத்தோடு, நெஞ்சந் தோய்ந்த அன்போடு சென்றால் அவனருள் பெற்று வாழலாம் என்ற உண்மையை உணர்த்துகின்றார். இறைவழிபாடு உள்ளத்தைப் பொறுத்ததே யொழியப் பொருள்களைப் பற்றியதல்ல என்ற பேருண்மையை மறத்தல் கூடாது.

"நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையவை
கடவுள் பேணே மென்னா வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினும்
கடவன் பாரி கைவண் மையே”