பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


8. பிறர் நலம் பேணுதல்:

சங்க இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையையே அடிப்படையாகக்கொண்டு எழுந்தன. அவைகளுள் நல்ல பேரறங்கள் பேசப் பெறுகின்றன. அறிஞர்கள் மனிதனைச் 'சமுதாயப் பிராணி' என்று சொல்லுகின்றார்கள். அதாவது அவன் பிறருக்காக வாழ்கிறான்; பிறரோடு கலந்து வாழக் கடமைப்பட்டவன் என்று சொல்லுகிறார்கள். இங்ஙனம் பிறருக்கென்றே வாழ்ந்த பெருமை தமிழ்ச் சமுதாயத்திற்கு உண்டு. தமிழன் என்றுமே தன்னைப் பற்றிக் கருதியதில்லை. "பிறருக்கென முயல்வார் உண்மையானே உலகம் உண்டு" என்று தமிழ் மன்னன் பேசுகின்றான். “தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்” என்று அகநானூறு கூறுகின்றது. பிறருக்கு நன்மை செய்வதிலே தீமை வரினும் ஏற்றுக்கொண்டு நன்மையே செய்கின்ற பண்பாட்டைத்தானே திருவள்ளுவர், "மருந்து மரம்” என்ற உவமையால் விளக்குகின்றார்.

இந்த அருமையான, பிறர் நலம் பேணுகின்ற பண்பாட்டிற் சிறந்தவன் தேர்வண் மலையன் என்ற வீரத் திருமகன். அவனை வடம வண்ணக்கண் பெருஞ் சாத்தனார் என்ற புலவர் பாராட்ட நினைத்தார்; பாராட்டினார். புலவரது பாராட்டுரையிலே உவமை ஒன்று அழகு பெறுகிறது. தேர்வண் மலையன் தனது முயற்சியால் - புயவலியால் திரட்டிய பொருளை எல்லாம் யாவர்க்கும் வழங்குகின்றான். தனது பொருளைத் தான் நுகரவில்லை-அனுபவிக்கவில்லை-அனுபவிக்க அவன் ஆசைப்பட்டதும் இல்லை. அவனது சிந்தனை பிறரது வாழ்க்கையில் அவன் விரும்பியது அவனைச் சாதாரண மகிழ்ச்சியால் ஆழ்த்துகின்ற நறவு. இதனை எண்ணுகிறார் புலவர்.

தேர்வண் மலையனது பண்பாட்டை விளக்கிக் கூற உவமையைத் தேடுகின்றார். அவரது கூர்த்த அறிவு-நீண்ட நாள் அனுபவ உணர்ச்சி எருதினை தினைவூட்டியது.