பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிலரிடமிருந்தோ, சமுதாயத்திலிருந்தோ விலகி வாழுகிறவன் விலங்காகிப் போகிறான். வேறுபாட்டிலும்கூட விழுமிய ஒருமைப்பாட்டை உண்டாக்கி வாழத் தெரிந்தவன்தான் உயர்ந்த மனிதனாகிறான்.

உலகத்தை - மனித குலத்தை ஒருமைப்படுத்தத்தான் மொழியே யொழிய வேறுபாட்டுணர்வுகளை உண்டாக்கி, அவற்றால் சண்டை போட்டுப் பிரிந்து வாழ்வதற்கல்ல. உலக மனித குலத்தை ஒருமைப்படுத்த எழுந்த மொழியை வேறுபாட்டுணர்வுகளுக்கு வித்திட - வேறுபாட்டுணர்வுகளை வளர்க்கப் பயன்படுத்துவது நல்லதல்ல. அது மொழி வழி நாகரிகமல்ல. 'சமஸ்கிருதம்' என்பதற்குச் செய்யப் பட்டது என்பதுதான் பொருள். தமிழ் அப்படியன்று. அது இயற்கைமொழி. தானே வளர்ந்த மொழி - அது வாழ்க்கை மொழி - தமிழுக்கு இனிமையுமிருக்கிறது - எளிமையுமிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக செஞ்சொற் புலவர்கள் பல்லாயிரவர் நாவிலே தவழ்ந்து தவழ்ந்து அந்த இனிமையையும் எளிமையையும் அது பெற்றுத் திகழ்கின்றது. தமிழுக்கு இலட்சியமிருக்கிறது. .

திருக்குறள் மொழியால் தமிழ்நூல். அது கருத்து வழி உலகப் பெருநூலாக விளங்குகிறது. எப்படி வாழவேண்டும் என்பதற்கு இலக்கணம் செய்தார் வள்ளுவப் பெருந்தகை.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்
வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்”

என்றார். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே இப்படி வாழ வேண்டும் என்று கூறிய மொழி எவ்வளவு மூத்தமொழி? வள்ளுவப் பெருந்தகை, ஒழுக்கத்திற்கே ஒரு புது விளக்கம் தந்தவர். ஒழுக்கம் என்பது காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம் மாறுபட்டுத் தெரிகிறது. ஆனால் நிலையான பொதுவான ஓர் உயர்ந்த ஒழுக்கத்தை வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.