பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

21



பண்டைக்காலக் கல்விமுறை

கல்விமுறை தொடங்கிப் பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. தொல்காப்பியத்திலேயே நூல்புத்தகம் அறிமுகப்படுத்தப்பெறுகிறது. ஆதலால் அக்காலத்திலேயே கல்வி தரும் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கப்பெற்றது என்று தெரியவருகிறது. அதங்கோட்டாசான் என்ற ஆசிரியர் பற்றித் தொல்காப்பியப் பாயிரம் கூறுகிறது. ஏன்? ஆரிய மறைகள் வரலாற்றுக் காலத்துக்கும் முந்திய தொன்மையுடையவை என்பர். ஆரிய மறைகளாகிய ரிக், யசுர், சாம, அதர்வணம் ஆகிய நான்மறைகள் எல்லாம் வல்ல இறைவன் ஞானாசிரியனாக-ஆலமர் செல்வனாக அமர்ந்து அருளியவை என்பர். கல்வி அறிவு பெற நல்ல ஆசான் வேண்டும் என்று உபநிடதம் கூறுகிறது.

கல்வியியலின் தோற்றத்திற்கு மனித வரலாற்றை உந்திச் செலுத்தும் சிந்தனையே காரணமாக அமைந்திருக்க வேண்டும். மனிதன் தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் புரிந்துகொள்ளச் செய்த முதல் முயற்சியே கல்வியின் தொடக்கமாகும். காலப்போக்கில் கல்வி, உலக இயற்கையினும் ஆற்றலுடையதாக வளர்ந்து, இயற்கையையே தன் ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டுவரக் கூடிய ஆற்றலாக வளர்ந்து பரிணமித்தது. பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் ச. முத்துக்குமரன் அவர்கள் அறிவை "ஆற்றல்” என்றும் கூறலாம் என்று கூறுகிறார். ஆதலால், கல்வியே உலகத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கி, உலகத்தை அனுபவிப்பதில் வளர்ந்து, உலகத்தைத் தன் விருப்பத்திற்கு இயக்கிக் கொள்ளும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது.

இந்தக் கல்வி தனிமனிதப் பணிகளாகவே வளர்ந்தது குரு-சிஷ்யர் என்ற முறைதான் பண்டைய முறை. பின் கழகங்கள், பல்கலைக் கழகங்கள் என்று வளர்ந்து இன்று வலிமையான அடிப்படை அமைந்த நிறுவனங்கள் கல்வியை