பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

327


கலப்பையும் வைத்துக் கும்பிட்டான். எத்தனை பூசை போட்டும் அந்தக் கலைமகள் தேவியின் கருணா கடாட்சம் இந்த நாட்டில் இல்லை. அறிவிலே தெளிவில்லை, ஆற்றலிலே உறுதியில்லை. வெந்ததைத் தின்றார்கள்; விதிவந்தபோது செத்தார்கள். "மரணமிலாப் பெருவாழ்வு” என்று சித்தர் சொன்னது ஏட்டில் இருந்தது. படித்த பண்டிதர்கள் பதவுரையும் பொழிப்புரையும் சொன்னார்கள். எனினும் பாரினில் அந்த வாழ்க்கை-"மரணமிலாப் பெருவாழ்வு” இல்லை. சுதந்திரம் வந்தது. தேடித் திரிந்தாலும் கிடைக்காத கல்வி சமுதாயத்தையே தேடி வந்தது. கவிஞன் பாரதி,

"வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி”

என்று முழங்கினான். அம்முழக்கம் சுதந்திர ஆட்சியில் நடைபெறுகிறது. இன்று "தமிழகமெங்கும் கல்வி" என்பதே பேச்சு. "ஒரு பள்ளியைத் திறப்பவன் ஒன்பது சிறைச் சாலையை மூடுகிறான்” என்பது பழமொழி. மேலும், "கல்வி ஆயிரங்காலத்துப் பயிர்" என்பதும் பழமொழி. இன்றைய தமிழகத்தின் கல்வித்துறை மறுமலர்ச்சி எதிர்காலத் தமிழகத்தின் ஏற்றத்திற்கு ஏற்ற அறிகுறியாகும். ஊராட்சி மன்றங்கள் கல்வி நிலையப் பொறுப்பை மேற்கொண்டிருக்கின்றன. வளரும் பயிருக்கு வான்மழைபோல வளரும் குழந்தைக்குக் கல்வி மன்றத்தின் தலைவர்கள் உறுப்பினர்கள் கல்வித்துறையில் இன்னும் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும். மேதைத் தன்மைக்குச் சாதியும், அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது பத்தாம் பசலிக் கொள்கை; இன்று நாம் முயன்றால் நம் கிராமத்தில் எண்ணற்ற மேதைகளை உருவாக்க முடியும். ஆதலால் ஊராட்சி மன்றங்கள் எல்லோருக்கும் கல்வி-எப்படியாவது கல்வி-வையத்துள் வாழ்வாங்கு வாழக் கற்றுக்கொடுக்கும் கல்வியளிக்கும் பொறுப்பை மேற்கொள்ளவேண்டும்.