பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

330

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மூன்றாவது ஐந்தாண்டுத்திட்ட கால எல்லைக்குள் தன்னிறைவு உள்ள கிராமமாக்குதல் வேண்டும்.

கிராமத்தில் தேங்கிக்கிடக்கும் மனித சக்தியை வெளிப்படுத்திச் செயல்படுத்தும் ஆற்றல் கூட்டுறவு இயக்கத்திற்கு உண்டு. சுதந்திர பாரத சமுதாயக் குடும்பத்தின் இலட்சியம் சோஷலிச சமுதாய அமைப்பு. அந்த இலட்சியத்தை அடைய நம்முடைய இரண்டு நேர்ப்பாட்டைகள்: (1) கிராம ராஜ்ய மாகிய பஞ்சாயத்தும் (2) கூட்டுறவுமாகும். பிரிந்து கிடக்கும் மனித சக்திகளைக் கூட்டுறவு இயக்கத்தின் மூலம் ஒன்றுபடுத்த முடியும். கூட்டுறவால் நாட்டுயர்வு ஏற்படும். ஆதலால் கிராமத்தின் எல்லா முயற்சிகளையும் வேளாண்மை முதல் வாணிபம்வரை கூட்டுறவு முறையிலே செய்ய முயற்சிப்பது நல்லது. கூட்டுறவின் மூலமே சுரண்டுபவன், சுரண்டப்படுபவன் என்ற இரண்டு சாதிகளை ஒழிக்க முடியும். அம்மட்டுமல்ல-எதிலும் எப்படியாவது இலாபம் எடுத்தாக வேண்டும் என்ற வடிகட்டிய பிற்போக்குணர்விலிருந்து சமுதாயத்தைப் பேணிக்காப்பாற்றவும் முடியும். கூட்டுறவின் மூலம் "நமக்காக எல்லோரும் எல்லோருக்குமாக நாம்” என்ற உயர்ந்த வாழ்க்கை முறை உருவாகும்-உறவு கலந்த பந்தபாசம் பல்வேறு குடும்பங்களுக்குள் ஊடுருவி வளரும்.

மக்களாட்சி முறை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கொள்கை உலகம் முழுவதிலும் மனிதன் இந்த சுதந்திரத்திற்காகப் போராடிப் போராடி இந்த உரிமையைப் பெற்றிருக்கிறான். அப்படிப் பெற்றது ஆளுவதற்கோ, ஆதிக்கத்திற்கோ அல்ல. சுதந்திர நாட்டில் ஆளும் இனம் ஆளப்படும் இனம் என்ற வேறுபாட்டிற்கு இடமே இல்லை. ஆட்சிமுறை என்பது நல்வாழ்விற்கு உரிய நடைமுறை அமைப்பேயன்றி ஆதிக்கத்திற்காக அன்று. சுதந்திர நாட்டில் நாட்டின் குடியரசுத் தலைவரிலிருந்து கிராமத்தின் ஆட்சித் தலைவர் வரை அனைவரும் சமுதாயத் தொண்டர்கள்-காவலர்கள்