பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பலர் பார்த்ததே இல்லை-பலருக்குத் தெரியாது. எங்கள் மாவட்டங்களில் மண்ணிலும் ஈரமில்லை-மக்கள் மனத்திலும் ஈரமில்லை. நஞ்சையும் புஞ்சையும் நல்வளம் கொழிக்கின்ற மண்ணில் ஈரமிருக்கிறது. ஆனால் மண்ணில் ஈரமிருக்கிற அளவிற்கு மக்கள் மனத்திலே ஈரமிருப்பதாகத் தெரியவில்லை. ஒருவருக்கு என்னதான் செல்வமிருப்பினும், செல்வாக்கு சுகவாழ்வு கிடைத்திருப்பினும் அன்பு இல்லை என்றால் என்ன பயன்?

"அன்புடையர் எல்லாம் உடையர்; அன்பிலார்
என்னுடைய ரேனும் இலர்"

என்கிறது வள்ளுவம். "அன்பின் வழியது உயிர்நிலை” என்று வலியுறுத்துகிறது, அது. நமது சமயக் கொள்கையும் அதுதான். நமது சமயத்தின் மையக் கொள்கை எவரிடத்திலும் எப்போதும் அன்பாயிரு என்பது தானே.

நமக்கு வாழ்க்கையிலே பெரும் வரட்சி இருக்கிறது. அந்த வரட்சியைப் போக்கி வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதற்கான முயற்சி பலரிடம் இல்லை. நான் வேடிக்கையாகக் கூறுவதுண்டு. "மடங்களிலே மட்டும்தான் முன்பு சந்நியாசிகள் இருந்தார்கள். இப்போது வீடுகளிலும் பலர் சந்நியாசிகளாக ஆகிவருகிறார்கள்” என்றும், உழைக்க வேண்டும் என்ற ஆர்வமில்லை - முயற்சி இல்லை. பசித்தால் உண்பதும், தூக்கம் வந்தால் தூங்குவதுமாகவேதான் பலர் வாழ்கின்றனர்.

மனிதன் உழைக்கப் பிறந்தவன்; அவனது இலட்சியம் உழைப்பு. அந்த உழைப்பால் பெறுகின்ற உவகை - இன்பம் - மகிழ்ச்சி, அவ்வளவுதான்-உழைப்பையும் உழைப்பால் பெறுகின்ற இன்பத்தையும் சமயம் வெறுக்கவில்லை.

நமக்கு முயற்சி தேவை-புதிய நம்பிக்கை தேவை. பலர் ஏழையாக பாமரராக வாழ்வதும், சிலர் அவர்களது உழைப்பை உறிஞ்சி-சுரண்டிச் சுகவாழ்வு வாழ்வதும் விதி-