பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தகப்பனார் படிக்காதவர்கள். அவர்களிடம் பையன் எப்படிப் படிக்கிறான் என்று கேட்டால் "எப்படியோ பையன் கஷ்டப்பட்டுப் பள்ளிக் கூடத்திற்குப் போய்வருகிறான்" என்பார்கள். பள்ளியிலிருந்து பையன் வீடு வந்ததும் மாட்டைப் பிடித்துக் கட்டு என்று உத்தரவு வரும். குழந்தைகள் படிக்கும் சூழ்நிலை இன்னமும் உருவாகவில்லை. அந்தச் சூழ்நிலையை உருவாக்கி விட்டால் தமிழ் சமுதாயம் கல்வி பெற்றுவிடும். அதைக் கருத்தில் கொண்டுதான் கல்வியை முதலில் பொதுச் சொத்தாக்கியிருக்கிறோம். செல்வத்தைப் பொதுவுடமை யாக்குவது பிறகுதான். இப்போது மனிதனின் அறிவுக் கண்ணைத் திறந்துவிடுகிற தலைமுறையில் வாழ்கிறோம்.

வள்ளுவர் தலைசிறந்த கவிஞர். நம் காலத்துக் குழந்தைகள் தலைவர்களாக வரும்போது, வழக்கு மன்றங்களின் எண்ணிக்கை, பீடிக் கடைகளின் எண்ணிக்கை குறையும். அதற்கு வள்ளுவர், புத்தரின் கொள்கைகள் பரவ வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்ல விரும்புகிறோம். அன்றுதான் நாடு சிறக்கும். நாமும் சிறந்து வாழ்வோம்.

தமிழக மக்களுக்குத் தமிழன் என்ற உணர்ச்சி வரவேண்டும். ஒருவரையொருவர் பார்க்கும்போது சாதியை மறந்துவிட்டுத் தமிழன்; தமிழ்ச்சாதி என்று பார்க்கவேண்டும். தமிழர்களை ஒன்றுபடுத்தும் உணர்ச்சி என்று ஏற்படுகின்றதோ, தமிழன் பெருமை பெற்றால் அது தன் பெருமை என்ற உணர்ச்சி என்று ஏற்படுகின்றதோ அன்றுதான் நாம் பெருமை பெறுவோம்; வாழ்வோம்; அதற்கு இளைஞர்கள் தகுதி பெறவேண்டும். வள்ளுவரும் புத்தரும் இந்நாட்டில் சாதி வேற்றுமைகளை ஒழித்து ஒருகுலமாக்கியவர்கள். அப்படியே வாழவேண்டும் என்று இந்தத் தலைமுறையில் நினைக்கிற நாம் அந்தக் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும்.