பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொதுவியல் கட்டுரைகள்

343


13. வள்ளுவர் நெறி

அறிவைப் பற்றிய பேச்சு திருக்குறளில் நிறைய உண்டு. அறிவு மிகமிக இன்றியமையாதது என்பதைத் திருவள்ளுவர் ஒத்துக் கொள்கிறார் என்பதும் உண்மை. ஆனால் ஒன்றை மிகுந்து வற்புறுத்தும்போது அவர் அன்பைத்தான் வலியுறுத்துகின்றார். அன்பிற்குத்தான் ஆக்கமும், ஊக்கமும், ஆற்றலும் கொடுக்கின்றார். திருக்குறளை அறநூல் என்று போற்றுகிறார்களே தவிர அறிவு நூல் என்று யாரும் கூறியதில்லை, கூறுவதுமில்லை. திருக்குறளை இவ்வாறு அறநூல் என்று கூறுகின்ற அளவினாலேயே அது அன்பு நெறியை வற்புறுத்துகின்ற ஒரு பெருநூல் என்று தெளிந்து உணரலாம்.

திருவள்ளுவர் அறிவை ஒத்துக் கொள்ளுகின்றார்; அறிவு அற்றம் காக்கும் கருவி என்கின்றார். அன்பைப் பற்றி அவர் பேசும்பொழுது அதனை ஒரு கருவி என்று கூறாமல் உயிர்த் தொடர்பாக - நெகிழ்ச்சியாக - உணர்ச்சியாகக் குறிப்பிடுகின்றார். உயிர்த் தொடர்புடைய ஒரு பண்பாடு என்பதைத் திருவள்ளுவரே ஒத்துக் கொள்ளுகின்றார்.

திருவள்ளுவர் தமது நூலை முப்பால்களாக - அறம் பொருள் இன்பம் என்று மூன்று பிரிவுகளாக அருளியிருக்கிறார். இந்த முப்பால்களிலும் பேசப்பெற்ற பெருமை அன்பு நெறிக்குண்டு என்பதை நாம் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அறத்துப் பாலிலே முழுக்க முழுக்க அன்பு பற்றிப் பேசுகின்றார் - பொருட்பாலிலே பேசுகின்றார் - இன்பத்துப் பாலிலே முழுக்க முழுக்க அன்பு பற்றிப் பேசுகின்றார். இவ்வாறு முப்பால்களிலும் பேசப்பெறுகிற ஒரு பெருநெறி உண்டென்றால் அது அன்பு நெறிதான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இனி அறிவு நெறி பொருட்பாலில் மட்டுமே - அதுவும் அரசனைப் பற்றிப் பேசும்பொழுது - அரசியலைப் பற்றிப் பேசும் பொழுது